கங்கை ஆற்றில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்கள் மிதந்து கிடந்தது குறித்து உத்தரபிரதேசம், பீகார் மாநிலங்கள் மற்றும் மத்திய ஜல்சக்தி அமைச்சகம் ஆகியவற்றிற்கு தேசிய மனித உரிமை ஆணையம் (NHRC) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவல் 2வது அலை கட்டுக்கடங்காமல் சென்றுக் கொண்டிருக்கிறது. ஒரே நாளில் 3,62,727 புதிய கொரோனா பாதிப்புகள் பதிவு செய்யப்படுகின்றன. இதுவரை கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,37,03,665 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4,120 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த எண்ணிக்கை 2,58,317 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் கடந்த 2 தினங்கள் முன்பு உத்தரபிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களின் கங்கை நதியோர கிராமங்களில் கொரோனவால் உயிரிழந்த 100க்கும் மேற்பட்ட சடலங்கள் மிதந்து காணப்பட்டன. இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இச்சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், கொரோனாவுக்கு முன்னர் சடலங்களை எரிக்க ஆறாயிரம் ரூபாய் வரை செலவான நிலையில், தற்போது 6000~ 23000 ரூபாய் வரை செலவாகிறது. இதனால் பணத்திற்கு வழி இல்லாதவர்கள் சடலங்களை அப்படியே நதியில் விட்டு செல்கின்றனர் என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதனையடுத்து தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு (NHRC) புகார்கள் வந்ததையடுத்து, உத்தரபிரதேசம், பீகார் மாநிலங்கள் மற்றும் மத்திய ஜல்சக்தி அமைச்சகம் ஆகியவற்றிற்கு NHRC நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதுகுறித்து தேசிய மனித உரிமை ஆணையம் தனது கடிதத்தில், “மே 11, 2021 NHRC பெற்ற புகாரில், எங்கள் புனித கங்கை நதியில் இறந்த உடல்களை வீசும் நடைமுறை தெளிவாக ஜல் சக்தி அமைச்சகத்தின் தேசிய தூய்மையான கங்கா திட்டத்தின் வழிகாட்டுதல்களை மீறுவதாகும்.
மேலும் கங்கையில் மிதக்கும் இந்த உடல்கள் கோவிட்-19 பாதிக்கப்பட்டவர்களின் உடல்கள் என்று மக்கள் அச்சம் கொண்டுள்ளனர். இதுபோன்ற முறையில் அகற்றும் உடல்கள் கங்காவைச் சார்ந்திருக்கும் அனைவரையும் அவர்களின் அன்றாட நடவடிக்கைகளையும் கடுமையாக பாதிக்கக்கூடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சடலங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களாக இல்லாவிட்டாலும் கூட, இதுபோன்ற நடைமுறைகள், சம்பவங்கள் ஒட்டுமொத்தமாக சமூகத்திற்கு வெட்கக்கேடானவை, இது இறந்த நபர்களின் மனித உரிமைகளை மீறுவதாகும்.
இதுதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து உத்தரபிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுக்கும், மத்திய ஜல்சக்தி அமைச்சகத்தின் செயலாளருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த நோட்டீஸிற்கு நான்கு வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும்” என்று தேசிய மனித உரிமை ஆணையம் குறிப்பிட்டுள்ளது.