நீதிபதிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த வழக்கில் ஓய்வு பெற்ற முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணனை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் இன்று (டிசம்பர் 02) கைது செய்தனர்.

சென்னை மற்றும் கொல்கத்தா உயர்நீதிமன்றங்களில் நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் கர்ணன். இவர், உயர்நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராகவும், அவர்களின் குடும்பத்தினருக்கு எதிராகவும் அவதூறாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்தன.

இதனால், அதிருப்தியடைந்த தமிழகம், புதுச்சேரி பார் கவுன்சில், கர்ணன் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல்துறையில் புகார் அளித்தது. இந்த புகாரில் கர்ணன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா முன்பு நவம்பர் 30 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, கர்ணனை நேரடியாக விசாரணைக்கு அழைத்து, விசாரணை நடத்தப்பட்டதாகவும் இனிமேல் இதுபோன்ற வீடியோக்களை வெளியிட மாட்டேன் என்று அவர் உறுதி அளித்துள்ளதாகவும் காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதற்கு கடும் அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், கர்ணன் இன்னும் ஏன் கைது செய்யவில்லை என்று கேள்வி எழுப்பியிருந்தனர். இது குறித்து, தமிழக டிஜிபி மற்றும் சென்னை காவல்துறை ஆணையர் ஆகியோர் டிசம்பர் 7 ஆம் தேதி நேரில் ஆஜராகி உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தனர்.

இந்த நிலையில், சென்னையை அடுத்த ஆவடி அருகே முன்னாள் நீதிபதி கர்ணனை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர் மீது கலவரத்தைத் தூண்டும் விதத்தில் பேசுதல், பெண்களை அவமதித்தல் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஏற்கெனவே, 2017 ஆம் ஆண்டு, மேற்கு வங்க உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது, உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகளை அவமதிக்கும் வகையில் பேசியதாக கர்ணன் கைது செய்யப்பட்டு, 6 மாத சிறை தண்டனைக்குப் பிறகு விடுதலையாகி வெளியே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லி விவசாயிகள் உடனான பேச்சுவார்த்தை தோல்வியால் பாஜக கலக்கம்