கௌதம் வாசுதேவ் மேனன், வெற்றி மாறன், சுதா கொங்கரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய 4 வெற்றி இயக்குனர்கள் இணைந்து படம் எடுக்க இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
மொபைல் பயன்பாட்டில் சர்வதேச அளவில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. இந்தியாவில் ஹாட்ஸ்டார் மற்றும் அமேசான் ப்ரைம் ஆகிய தளங்கள் முன்னிலையில் உள்ளன. இந்நிலையில் ஆன்லைன் வீடியோ ஸ்ட்ரீமிங் தளங்களுக்குக் கிடைக்கும் வரவேற்பைக் கண்டு போட்டியில் முன் நிற்க நெட்ஃப்ளிக்ஸ் திட்டமிட்டுள்ளது.
தற்போது இந்தியாவில் நெட்ஃப்ளிக்ஸ்க்கு 2019ன் முதல் காலாண்டில் 2 மில்லியன் புதிய பயனாளர்களும் இரண்டாம் காலாண்டில் 5 மில்லியன் புதிய பயனாளர்களும் சப்ஸ்க்ரைப் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழில் அதிக கவனம் கொள்ள திட்டமிட்டிருக்கும் நெட்ஃபிளிகஸ் தமிழில் வெற்றி இயக்குனர்களை இணைத்து படம் செய்ய திட்டமிட்டுள்ளார்கள்.
இந்தியில் பிரபல இயக்குனர்களான அனுராக் காஷ்யப், கரன் ஜோகர், ஜோயா அக்தர் மற்றும் திபாகர் பானர்ஜி ஆகியோர் இணைத்து ‘லஸ்ட் ஸ்டோரி’ என்ற அந்தோலஜி படத்தை இயக்கினார்கள். நெட்ஃப்ளிக்ஸ் இணையதளம் லஸ்ட் ஸ்டோரி படத்தை 2018-ல் வெளியிட்டது.
இப்படம் இந்தி ரசிகர்களிடம் அமோக ஆதரவு பெற்றது. இந்த லஸ்ட் ஸ்டோரி நான்கு வெவ்வேறு கதைக்களம் கொண்டவை. நான்கு வேறுவேறு இயக்குனர்கள் நான்கு குறும்படங்களாக எடுக்க அவை ஒன்றாக இணைத்து வெளியிடப்பட்டது. இப்படத்தில் ராதிகா ஆப்தே, மனிஷா கொய்ராலா, கியாரா அத்வானி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் 2013-ல் வெளியான “பாம்பே டாக்கீஸ் படத்தின் சீக்வல்.
தற்போது இந்த நான்கு இயக்குனர்களும் நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்திற்காக மீண்டும் இணையப் போகிறார்கள் என்ற செய்தி அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளனர். அதற்கு ‘கோஸ்ட் ஸ்டோரீஸ்’ என்றும் பெயர் வைத்துள்ளனர்.
அதேபோல் தமிழில் நெட்ஃப்ளிக்ஸ் இணையதளத்திற்காக படங்கள் எடுக்க இயக்குனர்கள் கௌதம் வாசுதேவ் மேனன், வெற்றிமாறன், விக்னேஷ் சிவன் மற்றும் சுதா கொங்காரா ஆகியோர் இணைந்து ஒரு அந்தாலஜி படத்தை உருவாக்க இருக்கிறார்கள். இப்படத்தின் வேலைகள் அடுத்த மாதம் தொடங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.