இந்தியாவில் முதன்முதலாக ஒமைக்ரான் தொற்றை கண்டறியும் டாடா மருத்துவம் மற்றும் நோயறிதல் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ள ‘OmiSure’ கருவிக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) அனுமதி வழங்கி உள்ளது.
இந்தியாவில் இதுவரை 23 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 1,892 பேருக்கு ஓமைக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 766 பேர் குணமடைந்துள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிர மாநிலத்தில் 568 பேரும், டெல்லியில் 382 பேரும், கேரளாவில் 185 பேரும், ராஜஸ்தானில் 174 பேரும், குஜராத்தில் 152 பேரும், தமிழகத்தில் 121 பேரும் ஓமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று பரவல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. தற்போது இந்தியாவில் அசுர வேகத்தில் பரவி வரும் கொரோனா பிறழ்வு தொற்றான ஒமைக்ரான் தொற்றை துல்லியமாக கண்டறிய காலதாமதம் ஏற்படுகிறது.
ஏனெனில் பிற கொரோனா வேரியண்ட்களை கண்டறியும் ஆர்.டி.பி.சி.ஆர் உள்ளிட்ட சோதனை முறைகளின் மூலம் ஒமைக்ரானை கண்டறிய முடியாது. இந்தியாவில் தற்போது தெர்மோ ஃபிஷர் எனும் அமெரிக்க அறிவியல் கருவி நிறுவனம் தயாரித்த டெஸ்ட் கிட் மூலம் தான் ஓமைக்ரான் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
S Gene Target Failure (SGTF) என்ற சோதனை முறை மூலம் ஒமைக்ரான் தொற்று கண்டறியப்படுகிறது. கொரோனா வைரஸில் உள்ள ‘S’ Gene, ORF, ‘N’ gene, Rdrp, ‘E’ gene போன்ற ஜீன்கள் டார்க்கெட் செய்யப்பட்டு இந்த சோதனை நடத்தப்படுகிறது.
இந்நிலையில், தற்போது உள்நாட்டு நிறுவனமான மும்பையைச் சேர்ந்த டாடா மருத்துவம் மற்றும் நோயறிதல் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ள OmiSure எனப்படும் பிரத்யேக ஒமைக்ரான் கண்டறியும் டெஸ்ட் கிட்டுக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான ஒப்புதல் கடந்த ஆண்டு டிசம்பர் 30ம் தேதியன்று கொடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
டாடா நிறுவனத்தின் ‘OmiSure’ பரிசோதனையில் 2 மணி நேரத்தில் ஒமைக்ரான தொற்று கண்டறிய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஒப்புதல் கிடைத்திருப்பது ஒமைக்ரானுக்கு எதிரான சுகாதாரத்துறையின் நடவடிக்கைக்கு பலம் சேர்க்கும் வகையில் அமைந்துள்ளதாக மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.