ஒன்றிய பாஜக அரசை கண்டித்து நாடு முழுவதும் 2 நாள் வேலைநிறுத்தம் இன்று (28.3.2022) தொடங்கி நடைபெற்று வருகிறது. எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் தொழிற்சங்கத்தினர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
ஒன்றிய அரசு ஊழியர்களுக்கான 18 மாத அகவிலைப்படி நிலுவையை உடனே வழங்க வேண்டும். ஒன்றிய அரசு அலுவலகங்களில் 8.75 லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், பொதுத் துறை வங்கிகளை தனியார்மயமாக்க கூடாது என்பன உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஒன்றிய அரசு ஊழியர்கள் இன்றும், நாளையும் (மார்ச் 28, 29) நாடுதழுவிய பொது வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
இதில் ஒன்றிய அரசு, மாநில அரசு ஊழியர்களின் அகில இந்திய அமைப்புகள், காப்பீட்டு நிறுவனங்கள், வங்கி உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்களின் தொழிற்சங்கங்கள் பங்கேற்றுள்ளன. வங்கி பணிகள் மட்டுமின்றி எல்.ஐ.சி., தபால், வருமான வரித்துறை, சுங்கம், கலால், கணக்குத் தணிக்கைத்துறை,
மின்சாரத் துறை, நிலக்கரி, ஸ்டீல், எண்ணெய், தொலைத் தொடர்பு என பல்வேறு துறைகளில் செயல்பட்டு வரும் தொழிலாளர் அமைப்புகள் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் பங்கேற்றதால் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
ஒன்றிய அரசின் பொருளாதார கொள்கைகள் தொழிலாளர் திட்டங்களுக்கு எதிராக இருப்பதாக குற்றம்சாட்டி, சி.ஐ.டி.யு., ஐ.என்.டி.யு.சி., எம்.எம்.எஸ்., ஏ.ஐ.டி.யு.சி., எல்.பி.எப். உள்ளிட்ட பல தொழிற்சங்கங்கள் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்துகின்றன.
எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் வேலை நிறுத்தம் தீவிரமாக நடந்து வருகிறது. ஊழியர்கள் வேலைக்கு வராவிட்டால் சம்பளம் கிடையாது என ஒன்றிய- மாநில அரசுகள் எச்சரித்தபோதும் கூட அவற்றை மீறி இன்று வேலைநிறுத்தம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மேற்குவங்காளம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. சில மாநிலங்களில் ரயில் மறியல் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. சில இடங்களில் பேருந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பல பகுதிகளில் வங்கி ஊழியர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் வங்கிப் பணிகளும் பாதித்துள்ளன.
தமிழகத்தில் 8 அரசு போக்குவரத்து கழகங்களில் 1.35 லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். அவர்களில் பெரும்பாலான டிரைவர், கண்டக்டர்கள் இன்று பணிக்கு வரவில்லை. இதனால் தமிழகம் முழுவதும் சுமார் 70 சதவீத பஸ்களை இயக்க முடியவில்லை. இதனால் தமிழகத்தில் பேருந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னை உட்பட இடங்களில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம், சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் ஆளும் திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும், சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்களும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.