ட்விட்டர் இந்தியா நிறுவனம் மீது டெல்லி சைபர் க்ரைம் காவல்துறை போக்ஸோ மற்றும் ஐடி சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்துள்ளது. இது ட்விட்டர் இந்தியா மீது பாயும் 4வது வழக்காகும்.
இந்தியாவில் சமூக வலைத்தளங்களுக்கும் ஓடிடி தளங்களுக்கும் ஒன்றிய பாஜக அரசு கடந்த பிப்ரவரி மாதம் புதிய சட்டங்களை கொண்டு வந்தது. இந்த சட்டங்களை ட்விட்டர் நிறுவனம் ஏற்றுக் கொள்ள மறுத்ததால், இந்தியாவில் ட்விட்டர் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருந்த சட்டப் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டிருப்பதாக ஒன்றிய பாஜக அரசு அறிவித்தது.
இதனால் ஒன்றிய பாஜக அரசுக்கும் ட்விட்டர் நிறுவனத்திற்கும் இடையே கடந்த சில வாரங்களாகவே மோதல் காணப்படுகிறது. இந்நிலையில் தேசிய குழந்தைகள் உரிமை மற்றும் பாதுகாப்பு ஆணையம் சார்பில் டெல்லி சைபர் க்ரைம் பிரிவில் ட்விட்டர் இந்தியா நிறுவனம் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
அதில், ட்விட்டர் தளத்தில் தொடர்ச்சியாக குழந்தைகளைக் கொண்டு உருவாக்கப்படும் ஆபாசப் படங்கள் பதிவேற்றப்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சைபர் குற்றப்பிரிவின் உயர் அதிகாரி விசாரணைக்கு ஆஜராகவும் அந்த ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.
இதனைத்தொடர்ந்து, தற்போது ட்விட்டர் இந்தியா நிறுவனம் மீது போக்சோ மற்றும் ஐடி சட்டத்தின் கீழ் டெல்லி சைபர் க்ரைம் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்தியாவில் சட்டப் பாதுகாப்பை இழந்த பின்னர் ட்விட்டர் இந்தியா நிறுவனம் மீது பதியப்படும் 4வது வழக்கு இதுவாகும்.
இதற்கு முன்னர் உத்தரப் பிரதேச மாநிலம் லோனி பகுதியில் இஸ்லாமிய முதியவர் தாக்கப்படும் வீடியோவை பகிர்ந்த விவகாரத்தில் ட்விட்டர் இந்தியா நிறுவனம் மீது காசியாபாத் காவல்துறை வழக்குப்பதிவு செய்தது.
மேலும் ட்விட்டர் தளத்தில் இந்தியா வரைபடத்திலிருந்து காஷ்மீரை பிரித்து தனி நாடாகக் காட்டியது தொடர்பாக இந்தியாவின் ட்விட்டர் நிர்வாக இயக்குனர் மனிஷ் மகேஸ்வரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
ட்விட்டரிலுள்ள உள்ள வரைபடம் ஒன்றில் ஜம்மு- காஷ்மீர், லடாக் பகுதிகளை இந்தியாவின் ஒரு அங்கமாகக் காட்டாமல் வேறு ஒரு நாடாகக் காட்டியுள்ளது புதிய சர்ச்சையைக் கிளப்பியது. ட்விட்டர் தளத்தில் Tweep Life என்ற செக்ஷனில் தான் ஜம்மு- காஷ்மீர் இப்படித் தனி நாடாகக் காட்டப்பட்டு இருந்தது.
இது தொடர்பாக உத்தரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த பஜ்ரங் தள் உறுப்பினர் அளித்த புகாரின் பெயரில் ட்விட்டர் இந்தியா நிர்வாக இயக்குனர் மனிஷ் மகேஸ்வரி மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 505 (2) மற்றும் 2008 ஆம் ஆண்டின் ஐடி (திருத்த) சட்டம் பிரிவு 74 ஆகியவற்றின் கீழ் முதல் தகவல் அறிக்கையை உத்திரபிரதேச காவல்துறையினர் பதிவு செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஜூலை 31க்குள் ‘ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம்’- உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு