ஒன்றிய பாஜக அரசு கொண்டுவந்துள்ள அணைகள் பாதுகாப்பு மசோதாவை எதிர்த்து, திமுக எம்.பி. ராமலிங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு ஒன்றிய பாஜக அரசு அணைகள் பாதுகாப்பு சட்டத்தை மக்களவையில் நிறைவேற்றியது. இந்நிலையில் கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இந்த சட்டம் மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது.
ஒன்றிய அரசின் அணைகள் பாதுகாப்பு மசோதாவிற்கு ஆரம்பம் முதல் திமுக தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில், இந்த சட்ட மசோதாவை எதிர்த்து திமுக எம்.பி. ராமலிங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், மாநில அரசின் அதிகார வரம்பில் உள்ள அணைகள் பாதுகாப்பு தொடர்பாக சட்டம் இயற்ற ஒன்றிய அரசுக்கு அதிகாரம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டத்தின் மூலம் தேசிய அணைகள் பாதுகாப்பு குழு மற்றும் தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையம் ஆகிய இரண்டு அமைப்புகளை ஏற்படுத்தி நாடு முழுவதும் உள்ள முக்கிய அணைகளை தங்கள் கட்டுப்பாட்டில் எடுக்கும் வகையில் ஒன்றிய அரசு இந்த சட்டத்தை நிறைவேற்றி உள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் மாநில அரசின் அதிகாரத்தை பறிக்கும் வகையில் ஏற்பட்டுள்ள இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் சட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி முனிஸ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில், மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், முறையீடு செய்தார். இந்த முறையீட்டை ஏற்று நீதிபதிகள் இந்த வழக்கை ஜனவரி 10 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்துள்ளனர்.