ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் மகள் ஜோயிஷ் இரானி, கோவாவில் சட்டவிரோதமாக மதுபான விடுதி நடத்துவதாக சர்ச்சை வெடித்துள்ள நிலையில், அமைச்சரை பிரதமர் மோடி பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியினர் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
ஒன்றிய ஜவுளித்துறை மற்றும் சிறுபான்மை விவகாரங்கள் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி. இவரின் மகள் ஜோயிஷ் இரானி, கோவாவில் நடத்தி வரும் விடுதியின் மதுபான உரிமையைப் புதுப்பிக்க, இறந்தவரின் ஆவணத்தை சமர்ப்பித்துப் பெறப்பட்டதாக குற்றம்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் பவன் கேரா எழுப்பிய குற்றச்சாட்டில், “சில்லி சோல்ஸ் விடுதிக்கு விதிமீறல் தொடர்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அந்த நோட்டீஸ் அனுப்பிய அதிகாரி மேலிட அழுத்தம் காரணமாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சில்லி சோல்ஸ் உணவு விடுதியில் சட்டவிரோதமாக மதுபான விடுதி உள்ளது.
12500 சதுர அடியில் நவீன வசதிகளுடன் சொகுசாக அமைந்திருக்கும் இந்த உணவகத்துடன் கூடிய பாருக்கான உரிமம் அந்தோனி டகமா என்பவர் பெயரில் உள்ளது. இந்த அந்தோனி டிகாமா கடந்த 2021ம் ஆண்டு உயிரிழந்துவிட்டார். ஆனால், பார் உரிமம் ஜூன் 2022ல் தான் புதுப்பிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
13 மாதங்களுக்கு முன்னரே இறந்த நபரின் பெயரில் எப்படி உரிமம் பெற முடியும்? கோவாவில் எல்லா உணவகங்களுக்குமே ஒரே ஒரு மதுபான விடுதிக்குதான் உரிமம் இருக்கும். சில்லி சோல்ஸ் உணவகத்தில் மட்டும்தான் இரண்டு பார்களுக்கான உரிமம் இருக்கிறது. இவையெல்லாம் மேலிட அழுத்தம் இல்லாமல் நடந்துவிடுமா?
இந்த உணவகத்தை சுற்றி பவுன்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஊடக வெளிச்சம் இந்த விடுதியின் மீது படாமல் இருக்கவே இந்த கெடுபிடி” என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார்.
இந்த விவாகரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலையிட்டு இளைய தலைமுறையினர் நலனைக் காக்க சட்டவிரோத பார் நடத்தும் ஸ்மிருதி இரானியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியினர் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
ஆனால், இதனை ஸ்மிருதி இரானியின் மகள் ஜோயிஷ் இரானி திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது தொடர்பாக ஜோயிஷ் இரானி தரப்பு வழக்கறிஞர் கிரத் நக்ரா கூறுகையில், “என்னுடைய மனுதாரர் ஹோட்டல் நடத்தவும் இல்லை, அதற்கு உரிமையாளரும் இல்லை. எந்தவிதமான நோட்டீஸும் கோவா அரசிடம் இருந்தோ, அதிகாரிகளிடம் இருந்தோ வரவில்லை.
என்னுடைய மனுதாரரின் தாயார் புகழ்பெற்ற அரசியல் தலைவர் ஸ்மிருதி இரானி, அவர் மீதான அரசியல் காழ்புணர்ச்சிளைத் தீர்க்கும் வகையில் சமூக ஊடகங்களில் இதுபோல், அற்பமான, தவறான, தீங்கிழைக்கும், அவதூறான கருத்துக்கள் பரப்படுகின்றன. இந்தக் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது. உண்மையைத் தெரிந்துகொள்ளாமல் தவறான பிரச்சாரங்கள் செய்யப்படுவது வேதனையானது, துரதிர்ஷ்டம்” எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறுகையில், “காங்கிரஸ் கட்சியின் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் ரூ.5 ஆயிரம் கோடி ஊழல் செய்ததாக உண்மையை பேசியதால் என் மகள் குறிவைக்கப்படுகிறாள். 2024 ஆம் ஆண்டு தேர்தலில் அமேதி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட்டால், அவர் தோல்வியடைவது உறுதி. இந்தக் குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரத்தை எதிர்க்கட்சிகள் வெளியிட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் பாஜகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.