திறந்தவெளி சிறைச்சாலைக்காக ஒதுக்கப்பட்ட 31 ஏக்கர் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டியுள்ள 28 கட்டிடங்களை ஒரு மாதத்திற்குள் அகற்ற சாஸ்த்ரா பல்கலைக்கழகத்திற்கு தமிழக அரசு கெடு விதித்து நோட்டீஸ் ஒட்டி உள்ளது.

தஞ்சாவூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திருமலைசமுத்திரத்தில் இயங்கி வருகிறது சாஸ்த்ரா பல்கலைக்கழகம். இந்த பல்கலைக்கழகம், தஞ்சாவூர் திறந்தவெளி சிறைச்சாலைக்கு ஒதுக்கப்பட்ட சுமார் 31 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து 28 கட்டிடங்களை கட்டி உள்ளது.

இந்த ஆக்கிரமிப்பை அகற்ற கடந்த 2018 ஆம் ஆண்டு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதற்கான காலக்கெடுவும் கடந்த 2018 அக்டோபர் 3 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. அப்போது வட்டாட்சியராக இருந்த அருணகிரி, அந்த பல்கலைக்கழகத்திற்கு சென்று அளவிடும் பணியை தொடங்கினார்.

ஆனால், பல்கலைக் கழக மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சேர்ந்து அப்போதைய தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து, மாணவர்கள் படிக்க கூடிய நேரத்தில் கட்டிடங்கள் இடிக்கப்பட்டால் அவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படும் என மனு அளித்தனர்.

அந்த மனு குறித்து விளக்கம் அளிக்க அப்போது தமிழக முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமியிடம் விளக்கம் கேட்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து அப்போது ககன்தீப் சிங் பேடி ஐஏஎஸ் தலைமையிலான 5 பேர் கொண்ட குழுவை அரசு அமைத்தது. ஆனால், இந்த குழு 3 ஆண்டுகளில் எந்த விசாரணையிலும் இறங்கவில்லை என கூறப்படுகிறது. இதனால், ஆக்கிரமிப்பு கட்டிடங்களின் மீது நடவடிக்கை எடுக்க முடியாத நிலை தொடர்ந்தது.

இந்நிலையில், மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவி ஏற்றதும், ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களை மீட்பதில் தீவிரம் காட்டி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, சாஸ்த்ரா பல்கலைக்கழக்ம ஆக்கிரமித்துள்ள நிலத்தை மீட்கும் நடவடிக்கையை எடுத்து வருகிறது.

அதன்படி, ஏற்கனவே பேடி தலைமையில் அமைக்கப்பட்ட குழுவை கலைத்து விட்டு, தமிழக அரசின் நில சீர்திருத்த இயக்குனர் ஜெயந்தி ஐஏஎஸ் தலைமையிலான 5 பேர் கொண்ட குழுவை அமைத்தது ஆய்வு செய்ய வலியுறுத்தியது.

இந்த குழுவினர், கடந்த 22.10.21 அன்று தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் மற்றும் எவ்வளவு நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து ஆய்வு செய்து, அந்த ஆய்வு அறிக்கை தமிழக அரசிடம் தாக்கல் செய்யப்பட்டது.

இதனையடுத்து, நேற்று (25.2.2022), தஞ்சை கூடுதல் ஆட்சியர் சுகபுத்ரா, கோட்டாட்சியர் ரஞ்சித் மற்றும் தஞ்சை வட்டாட்சியர் மணிகண்டன் ஆகியோர் கல்லூரி நிர்வாகத்திடம் நோட்டீஸ் கொடுத்தனர். மேலும் சாஸ்த்ரா பல்கலைக்கழக வளாகத்தில் ஆக்கிரமிப்பு குறித்து நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

அதில், “ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அரசு இடங்களில் கட்டப்பட்டுள்ள கட்டிங்களை நான்கு வாரங்களுக்குள் (24.03.2022) அகற்ற வேண்டும். ஆக்கிரமிப்பு அகற்றப்படாத பட்சத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், ஆக்கிரமிப்பு இடங்களில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் அகற்றப்பட்டு அதற்கான செலவுத் தொகை கல்லூரி நிர்வாகத்திடம் பெறப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.