சென்னையில் தனியார் ஐ.டி. நிறுவன ஊழியர்களின் ஏ.டி.எம். அட்டை தகவல்களைத் திருடி பணத்தை அபகரித்ததாக வட மாநிலங்களைச் சேர்ந்த 9 பேர் கைது செய்யப்பட்டனர். இது குறித்து போலீஸ் தரப்பில் தெரிவித்த விவரம் வருமாறு :
சென்னை பெருங்குடியில் உள்ள ஒரு தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள், தங்களது டெபிட்,கிரெடிட் கார்டுகளில் இருந்து பணம் திருடப்படுவதாக பெருநகர காவல்துறையின் மத்தியக் குற்றப்பிரிவில் ஏராளமான புகார்கள் அளித்தனர்.
அந்த புகார்களின் அடிப்படையில் மத்தியக் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனர். விசாரணையில், அந்த நிறுவனத்தில் உள்ள உணவகத்தில் சில ஊழியர்கள் ஸ்கிம்மர் கருவியை பொருத்தி, அங்கு சாப்பிட வரும் மென்பொருள் பொறியாளர்கள் கட்டணம் செலுத்த கொடுக்கும் டெபிட்,கிரெடிட் கார்டுகளின் தகவல்களைத் திருடி, அந்த தகவல்கள் போலி ஏ.டி.எம். கார்டுகளில் பதிவேற்றம் செய்து, அவற்றின் மூலம் ஏடிஎம் இயந்திரங்களில் பணத்தை திருடியிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீஸார், அந்த உணவக ஊழியர்களிடம் விசாரணை செய்தனர்.
விசாரணையில் இச் சம்பவத்தில் ஈடுபடுவது அங்கு பணிபுரியும் பிகார்,உத்தரபிரதேசம்,ஹரியாணா போன்ற வட மாநிலங்களைச் சேர்ந்த ராகுல்சிங், குந்தன்சிங்,சுரேஷ்குமார்,ராகுல்குமார், பிகாஷ்குமார்,குந்தன்குமார்,ராம்பீர்குமார்,விபின்குமார்,சுதிர் ஆகிய 9 பேர்தான் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார், அவர்கள் 9 பேரையும் சனிக்கிழமை கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், சுமார் இரண்டு மாதங்களாக இக் கும்பல் இந்த மோசடியில் மென்பொருள் பொறியாளர்கள் ஏ.டி.எம். கார்டுகளில் இருந்து பல லட்சம் பணத்தை திருடியிருப்பது தெரியவந்தது. அவர்களிடமிருந்து போலீஸார், மோசடிக்கு பயன்படுத்திய மடிக்கணினி, ஸ்கிம்மர் கருவி, இடிசி கருவி,என்கோடர் கருவி,போலி ஏடிஎம் கார்டுகள், ரூ.1.48 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட 9 பேரும் ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் நீதிமன்ற உத்தரவுப்படி, புழல் மத்திய சிறையில் 9 பேரும் அடைக்கப்பட்டனர்.