சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள ராஜபுளியேந்தல் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமி என்பவர் சாத்தரசன்கோட்டையில் இருந்து இளையான்குடிக்கு அரசுப் பேருந்தில் பயணம் செய்துள்ளார்.

இந்நிலையில், பயணச்சீட்டு பரிசோதகர் அந்தப் பேருந்தில் சோதனை நடத்தினார். அப்போது பயணச் சீட்டு பெறாமலேயே லட்சுமி பயணம் செய்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் அவருக்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.ஆனால், தான் தூங்கிவிட்டதாகவும், நடத்துநர் தன் இருக்கை அருகே வந்து பயணச்சீட்டு வழங்கவில்லை எனவும் பரிசோதகரிடம் லட்சுமி குற்றம்சாட்டியதாக கூறப்படுகிறது.

இதனால், லட்சுமிக்கும், நடத்துநருக்கு இடையே ஏற்பட்ட தகராறில், நடத்துனர் அவரை தாக்கியுள்ளார். பேருந்து நிலையத்தில் 3 வயது குழந்தையுடன் இருந்த பெண்ணை அரசுப் பேருந்து நடத்துநர் தாக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
இச்சம்பவம் தொடர்பாக இருவரும் புகார் அளித்துள்ள நிலையில், இளையான்குடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.