கொரோனா வைரஸ் பேரிடரால் ஏழைகளும், தொழிலாளர் வர்த்தகத்தினரும் அனுபவித்துவரும் வேதனைகளை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என்று பிரதமர் மோடி வேதனையுடன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி; கொரோனாவுக்கு எதிரான போரை மிகவும் வலுவுடன் இந்திய மக்கள் போராடி வருகின்றனர். மக்களின் ஒத்துழைப்பே கொரோனா வைரஸிற்கு எதிரான போரில் வெற்றி பெற முக்கியக் காரணம்.
தனிநபர் இடைவெளி, முக கவசம் அணிவதை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும். கொரோனாவிற்கு எதிரான போர் நீண்ட காலம் இருக்க போகிறது. கொரோனா போர்- மக்கள் இயக்கமாக மாறி உள்ளது.
கொரோனா துயரம் எந்த ஒரு பிரிவினரையும் விட்டு வைக்கவில்லை. சாமானியர்கள், ஏழைகள் தற்போது அனுபவித்துவரும் துயரத்தை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. ஏழைகளுக்கு உதவும் நோக்கில் பல்வேறு தரப்பினரும் பணியாற்றி வருகின்றனர்.
குறிப்பாக, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அவர்களின் சொந்த ஊர்களுக்கு திரும்ப, ரயில்வே துறை சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளது. மேலும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு முகாம்கள் அமைக்கப்பட்டு உதவிகள் வழங்கப்படுகிறது.
மேலும் வாசிக்க: PM Cares Fund- அரசாங்க நிதி அல்ல; சொல்கிறது பிரதமர் அலுவலகம்
கொரோனாவை எதிர்கொள்ளும் அதே நேரத்தில் பொருளாதாரத்திலும் கவனம் செலுத்தி வருகிறது. புலம்பெயர் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கிராமங்களில் வேலைவாய்ப்பு உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
சுய சார்பு இந்தியா நாட்டை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்லும் என நம்புகிறேன். ஆயுஷ்மான் பாரத் திட்டம் மூலம் ஏழைகளின் பணம் மிச்சப்படுத்தப்பட்டுள்ளது.
நோய் எதிர்ப்பு சக்திக்கு யோகா முக்கியமானது; யோகா செய்வதை கடைபிடியுங்கள். யோகா மூலம் சுவாசப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மக்கள் முயன்று வருகின்றனர். பிராணயாமம் உள்ளிட்ட சில பயிற்சிகள் நமக்கு மிகச்சிறந்த தீர்வை அளிக்கும்.
ஊரடங்கு காலத்தில் பறவைகள், விலங்குகள் சுதந்திரமாக சாலைகளில் சுற்றித்திரிகின்றன. மாசு குறைந்து காட்சிகள் தெளிவாக உள்ளன; இது தொடர வேண்டும்.
இந்தியா எப்படி இதை சாதித்தது என்பதைத்தான் உலகமே உற்று நோக்கியுள்ளது. இந்தியா தனது சுய சக்தியில் செயல்படும் போது பல்வேறு பிரச்னைகள் தீர்க்கப்படும்.
வெட்டுக்கிளி தாக்கத்தில் இருந்து விவசாயிகளை காக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறியுள்ளார்.