ஜி.எஸ்.டி.யை எளிமையாக்குவதற்கு தனியாக ஒரு துறையே உருவாக்கப்படும் என காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது.
17 வது மக்களவை தேர்தலை ஒட்டி காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. இதில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன.
தேர்தல் அறிக்கை வெளியிட்ட பிறகு பேசிய அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டமும், விவசாயிகளின் பிரச்சனையும் அதிகம் உள்ளதாக குறிப்பிட்டார்.
பாஜக அரசில் கொண்டுவரப்பட்ட பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரி கடும் விமர்சனத்திற்கு உள்ளான நிலையில் அதனை மறுசீரமைக்கும் விதமாகவும் ராகுல் பேச்சு அமைந்தது.
சத்தீஸ்கர், ம.பி, ராஜஸ்தானில் சொன்னது போல் மற்ற மாநிலங்களிலும் விவசாய கடன் தள்ளுபடி எனவும் காங்கிரஸ் தெரிவித்து உள்ளது
தொழில்முனைவோர், முதலீடு, தொழில்நுட்பம், நிதியளிப்பு, உள்நாட்டு மற்றும் ஏற்றுமதிச் சந்தை உள்ளிட்ட அனைத்து வணிக நடவடிக்கைக்கும், தொழில் முனைவோருக்கும் உதவும் விதமாக, தனி இலாக்கா உருவாக்கப்படும் என ராகுல் தெரிவித்துள்ளார்.
மேலும், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், அரசு வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு தரப்படும் என்றும், தொழில் தொடங்கும் பெண்களுக்கு கடன் உதவி அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பாஜக அரசில் ஏற்றுமதி நலிவடைந்து விட்டதால் ஏற்றுமதிக்கு ஸிரோ வரி கொண்டு வரவும் உறுதி அளிக்கப்பட்டு உள்ளது .. இது ஏற்றுமதியாளர்கள் மிகவும் பயன் தரதக்க திட்டமாக பார்ப்பதாக தெரிவித்து உள்ளார்கள்
வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான முயற்சியில், சுற்றுலாத்துறை சம்பந்தப்பட்ட வணிகங்களில் முதலீடு செய்ய குறைந்த செலவு, நீண்டகால நிதியை வழங்குவதற்கான சுற்றுலா மேம்பாட்டு திட்டத்தை தேர்தல் அறிக்கையாக காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.