ஒரு மாதத்தில் 10 மணி நேரத்துக்கு மேல் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் இல்லாமல் இருந்தால் அந்த வங்கிகளுக்கு ரூ.10 ஆயிரம் வீதம் அபராதம் விதிக்கப்படும் என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
வங்கிகளில் காத்திராமல் மக்கள் தங்கள் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுப்பதற்காக ஏடிஎம் மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அந்தவகையில் கடந்த ஜூன் இறுதி நிலவரப்படி நாடு முழுவதும் 2,13,766 ஏ.டி.எம். மையங்கள் உள்ளன.
ஏடிஎம் இயந்திரத்தில் பணம் இல்லாத நிலை உருவாவதால் வாடிக்கையாளருக்கு ஏற்படும் சிரமத்தைத் தவிர்க்க ஏடிஎம் மையங்களில் எப்போதும் பணம் இருக்கும் வகையில் ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்து உள்ளது.
அதன்படி ஏடிஎம் மையங்களில் பணம் இல்லையென்றால் சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
ஒரு மாதத்தில் ஒரு ஏடிஎம் இயந்திரத்தில் 10 மணி நேரத்துக்கு மேல் பணம் இல்லாத நிலை உருவானால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். வங்கிகளுக்காக ஏடிஎம்களை நிர்வகிக்கும் பிற நிறுவனங்களின் (வெள்ளை லேபிள் ஏடிஎம்) ஏடிஎம் இயந்திரத்தில் பணம் இல்லாத சூழல் உருவானாலும்,
எந்த வங்கிக்காக அந்த ஏடிஎம் செயல்படுத்தப்படுகிறதோ அந்த வங்கியிடம் அபராதம் வசூலிக்கப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்த அபராதத் தொகையை அந்நிறுவனத்திடம் இருந்து வங்கிகள் பின்னர் வசூலித்துக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை அக்டோபர் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
இதற்காக வங்கிகளுக்கு சொந்தமான ஏடிஎம் இயந்திரங்கள் மற்றும் வங்கிகள் அல்லாத நிறுவனங்கள் நடத்தும் ஏடிஎம் இயந்திரங்கள் (White Label ATM) ஒரு மாதத்துக்கு பணம் இல்லாமல் எவ்வளவு நேரம் இருந்தன என்பது பற்றிய விவரங்களை, அடுத்த மாதம் 5 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவின் 12 கடலோர நகரங்கள் கடலுக்குள் மூழ்கும் அபாயம்: எச்சரிக்கும் நாசா