வாட்ஸ் அப் பே (WhatsApp Pay) தற்போது எஸ்பிஐ, எச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ, ஆக்சிஸ் வங்கிகளுடன் தனது செயலாக்கத்தை துவக்கி உள்ளதாக அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் போன் பே, கூகுள் பே, பேடிஎம் போன்றவற்றின் பயன்பாடுகள் அதிகரிதுள்ளன. வாட்ஸ் அப்பிலும் இத்தகைய பணப்பரிவர்த்தனை சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.
ஃபேஸ்புக் நிறுவனத்தால் நடத்தப்படும் வாட்ஸ் அப் செயலி, கடந்த 2018ஆம் ஆண்டு, யுபிஐ மூலம் பணம் அனுப்பும் வசதியை இந்தியாவில் அறிமுகம் செய்தது. ஆனால், இதற்கான பரிசோதனை குறிப்பிட்ட சில லட்சம் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில், வாட்ஸ்அப் பேமண்ட் சேவை கடந்த நவம்பர் மாதத்தில் National Payments Corporation of India-வின் (NPCI) ஒப்புதலை பெற்றது. அதன் வழியாக இந்த சேவை 160 க்கும் மேற்பட்ட ஆதரவு வங்கிகளுடன் (Unified Payment Interface – UPI) நேரலைக்குச் செல்வது உறுதி செய்யப்பட்டது.
தற்போது வாட்ஸ் அப் பே (WhatsApp Pay) இந்திய வாடிக்கையாளர்களுக்காக எஸ்பிஐ, எச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ, ஆக்சிஸ் வங்கிகளுடன் தனது செயல்பாடுகளை துவக்கி இருக்கிறது.
இதுகுறித்து இந்தியாவின் வாட்ஸ் அப் நிறுவன தலைவர் அபிஜித் போஸ் கூறுகையில், ஸ்டேட் வங்கி, ஐசிஐசிஐ, ஹெச்டிஎப்சி, ஆக்சிஸ் வங்கியுடன் இணைந்து எளிமையாக, பாதுகாப்பான முறையில் இந்தியா முழுவதும் பணம் அனுப்பும் வசதியை அறிமுகம் செய்வது மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருக்கிறது.
யுபிஐ முறை என்பது பரிமாற்றுச் சேவை. டிஜிட்டல் பொருளாதாரத்தின் நலன்களையும், நிதிச் சேவைக்குள் இதற்கு முன் வாய்ப்பு கிடைக்காத பலரையும் கொண்டுவர எங்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது” எனத் தெரிவித்து உள்ளார்.
இந்தியா முழுவதும் நடைமுறைக்கு வந்துள்ள வாட்ஸ் அப் பேமெண்ட் மூலம் ஒருவருக்கு புகைப்படம், வீடியோ, ஆடியோ அனுப்புவதைப் போல் எளிமையாக அனுப்ப முடியும். அதற்கு முன்னதாக, செட்டிங்ஸில் சென்று பேமெண்ட் பகுதியில், நாம் கணக்கு வைத்திருக்கும் வங்கிக் கணக்கை இணைத்துவிட வேண்டும். அதன்பின் வங்கிக்கணக்கில் பதிவு செய்துள்ள மொபைல் எண்ணுக்கு எஸ்எம்எஸ் வந்து அதை உறுதி செய்யும். அதன்பின் யுபிஐ மூலம் எளிதாகப் பணப் பரிமாற்றம் செய்யலாம்.
ஏறக்குறைய 40 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் பேமெண்ட் சர்வீஸ் ஆப்ஸ்களைப் பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கழுதை சாணத்தால் போலி மசாலா தயாரிப்பு; இந்து அமைப்பு தலைவர் கைது