ஒரே நாளில் 77,266 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால், அமெரிக்காவை விட அதிக பாதிப்பை சந்திக்கும் நாடாக இந்தியா உள்ளது அதிர்ச்சி அளித்துள்ளது.

கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்க, உலகின் பல்வேறு நாடுகளும் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. கொரோனா வைரஸ் தொற்றுக்கு உலகம் முழுவதும் இதுவரை 24,635,556 பேர் பாதிக்கப்பட்டு, 8,35,679 பேர் கொரோனா தொற்றால் பலியாகி உள்ளனர்.

உலக நாடுகளில் அதிகட்சமாக அமெரிக்காவில் மட்டும் 6,048,317 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 184,803 பேர் பலியாகினர். அமெரிக்காவுக்கு அடுத்து பிரேசிலில் 37,64,493 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 118,726 பேர் பலியாகி உள்ளனர்.

கொரோனா பரவலைத் தடுக்க இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் ஊரடங்கு தொடர்கிறது. இந்நிலையில், இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 77,266 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 33,92,295 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் ஒரே நாளில் புதிதாக 1,057 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதால், பலியானோர் மொத்த எண்ணிக்கை 61,694 ஆக உயர்ந்துள்ளது.

இத்தாலி, ஸ்பெயின், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தொற்றின் தீவிரம் குறையத் தொடங்கிய நிலையில் இந்தியா, பிரேசில், அமெரிக்கா போன்ற நாடுகளில் பாதிப்பு கடுமையாக அதிகரித்து வருகிறது.

கொரோனா பதிப்பில் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 45,699 பேருக்கும், பிரேசிலில் 42,489 பேருக்கும் புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் மட்டும் நேற்று ஒரே நாளில் 77,266 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சி அளித்துள்ளது.

இதனிடையே புதிய கட்டுப்பாடுகளுடன் கூடிய 4வது ஊரடங்கு குறித்த அறிவிப்பை பிரதமர் மோடி ஓரிரு நாட்களில் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஊரடங்கு தளர்வு குறித்து பேசும் மோடி அரசு கொரோனாவைக் கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை எடுத்தது என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.