அசாம் முதல்வர் மீது மிசோரம் காவல்துறை கொலை முயற்சி, சதி திட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், எல்லைப் பிரச்சனைக்கு விரைவில் தீர்வுகாண உச்ச நீதிமன்றத்தை நாடப்போவதாக அசாம் முதல்வர் கூறி உள்ளார்.
அசாம் மாநிலத்துக்கும் மிசோரம், நாகாலாந்து, மேகாலயா, அருணாசல பிரதேசம் மாநிலங்களுக்கும் இடையே நீண்டகாலமாக எல்லை பிரச்சனைகள் இருந்து வருகின்றன. இந்த எல்லை பிரச்சனைகளின் உச்சமாக கடந்த ஜூலை 26 ஆம் தேதி அசாம், மிசோரம் மாநிலங்களின் காவல்துறையினருக்கு இடையே துப்பாக்கிச் சூடு நடந்தது.
மிசோரம் எல்லைக்குள் நுழைந்து அசாம் காவல்துறையினர் குடில்களை அமைக்க முயன்ற போது இந்த துப்பஅக்கிச் சூடு மோதல் நடைபெற்றது. இதில் அசாம் காவல்துறையினர் 6 பேர் உயிரிழந்தனர். எஸ்.பி. உள்ளிட்ட 40 போலீஸ் அதிகாரிகள் படுகாயமடைந்தனர். இதனால் இரு மாநிலங்களிடையே பெரும் பதற்றம் தொடருகிறது.
இதன் எதிரொலியாக மிசோரம் மாநிலத்தின் எம்.பி.க்கள் உட்பட பல முக்கிய தலைவர்கள் மீது அசாம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதேபோல் அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா மீது மிசோரம் காவல்துறையினர் கொலை முயற்சி, சதி திட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் அசாம் முதல்வரின் தனி அலுவலக உயர் அதிகாரிகள் 6 பேர் மீதும், காவலர்கள் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது.
[su_image_carousel source=”media: 25250,25251″ crop=”none” captions=”yes” autoplay=”2″ image_size=”full”]
இந்நிலையில், மிசோரம் மாநிலத்துடனான எல்லைப் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காண்பதற்காக உச்ச நீதிமன்றத்தை நாடப்போவதாக அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறி உள்ளார். பிரச்சனையை தீர்த்தால் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க தயார் என்றும் அவர் தெரிவித்தார்.
மிசோரம் முதல்வர் சோரம் தங்கா மற்றும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் தொலைபேசியில் பேசிய சில மணி நேரங்களுக்குப் பிறகு அசாம் முதல்வர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். முன்னதாக, தனது மாநில அதிகாரிகளை விசாரிக்க அனுமதிக்க மாட்டேன் என்று சர்மா கூறியிருந்தார்.
அர்த்தமுள்ள பேச்சுவார்த்தை மூலம் எல்லை பிரச்சனையை சுமூகமாகத் தீர்ப்பதற்கு, அசாம் முதல்வர் சர்மா மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் ஒப்புக்கொண்டதாக மிசோரம் முதல்வர் சோரம்தங்கா கூறி உள்ளது குறிப்பிடத்தக்கது.