நடிகையும், ஆந்திர மாநிலம் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வுமான ரோஜாவுக்கு, ஊரடங்கு உத்தரவுவை பொருட்படுத்தாமல் ஊரே ஒன்று கூடி மலர்கள் தூவி வரவேற்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் இதுவரை 757பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நகரி தொகுதி எம்.எல்.ஏ.வான நடிகை ரோஜா புத்தூர் அருகே உள்ள சுந்தரய்ய நகரில் புதிய குடிநீர் குழாயை திறந்து வைக்க சென்ற போது, அவருக்கு கிராம மக்கள் ஒன்று கூடி வரிசையாக நின்று வழிநெடுகிலும் மலர்கள் தூவி வரவேற்றனர். மேலும் பிரம்மாண்ட மாலை ஒன்றும் அணிவிக்கப்பட்டது.
அண்மையில் கொரோனா தடுப்பு பணிகளில் ரோஜாவின் செயல்பாடுகளுக்கு பாராட்டுகள் குவிந்த நிலையில் அவரே அதனை கெடுத்துக்கொள்ளும் வகையில் இப்போது நடந்துகொண்டது தான் குறிப்பிடத்தக்கது.
கொரோனாவின் தாக்கம் இந்தியாவில் அதிகரித்துவரும் நிலையில், ரோஜாவின் இந்த நடவடிக்கையை தெலுங்கு தேசம் கட்சி கடுமையாக கண்டித்துள்ளதோடு விமர்சிக்கவும் செய்துள்ளது.
ஆந்திராவில் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்கள் இப்படி சர்ச்சையில் சிக்குவது தொடர்கதையாகி வருகிறது. கடந்த வாரம் காளஹஸ்தி தொகுதி எம்.எல்.ஏ. மதுசூதன் ரெட்டி கொரோனா நிவாரண நிதி அளிக்கும் விவகாரத்தை மையமாக வைத்து ஜெகன் மோகன் ரெட்டி கட் அவுட்களை டிராக்டர்களில் வைத்து மெகா ரேலி நடத்தி சர்ச்சையில் சிக்கினார். தற்போது ரோஜா சர்ச்சையில் சிக்கியுள்ளார். இதனால் ஜெகன் மோகன் ரெட்டியை விமர்சனத்திற்கு உள்ளாக்கியுள்ளது.