ஊரடங்கை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கில், மனுதாரருக்கு ரூ.50,000 அபராதத்துடன் சென்னை உயர் நீதிமன்றம் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் கோவிலம்பாக்கத்தைச் சேர்ந்த தமிழக முற்போக்கு மக்கள் கட்சியைச் சேர்ந்த இம்மானுவேல் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ”கொரோனா வைரஸ் காரணமாக 21 நாட்கள் என்று கூறி கடந்த மார்ச் 24ம்தேதி முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இந்த ஊரடங்கை படிப்படியாக நீட்டித்து, தற்போது வரும் 31ம்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதனால் பலர் வருவாய் இழந்துள்ள நிலையில், என்னைப் போல குறைவான வருவாய் ஈட்டுவோர், கடுமையான சிரமத்தில் உள்ளனர். இந்த வைரஸ் பரவாமல் தடுக்க சீனா, இத்தாலி போன்ற நாடுகள் முழு ஊரடங்கை அறிவித்தது. ஆனால், தென்கொரியா, சுவீடன் போன்ற நாடுகள் முழு ஊரடங்கை அறிவிக்காமல், வைரஸ் தொற்று பரவாமல் தடுத்தது.
உலகில் கொரோனா வைரஸுக்கு எதிராக இரு விதமான நடவடிக்கைகளை நாடுகள் எடுக்கின்றனர். மேலும், கொரோனா வைரஸுக்குத் தடுப்பு மருந்து கண்டு பிடிக்கும் வரை அது நம்முடன் தான் இருக்கும். ஒருவருக்கு ஒருவர் இடைவெளியை கடை பிடிக்க வேண்டும். முகக்கவசம் அணியவேண்டும் என்பது போன்ற நிபந்தனைகளை அரசு விதித்துள்ளது. இதை கடை பிடித்தாலே வைரஸ் தொற்றில் இருந்து தப்பிக்கலாம். எனவே, ஊரடங்கை நீட்டித்து கடந்த 17ம் தேதி மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யவேண்டும்” என்று கூறியுள்ளார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஏற்கனவே இதுபோல் தொடரப்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளதாகவும், மனுதாரர் அரசியல் கட்சியைச் சார்ந்தவர் என்பதால் அரசியல் காரணங்களுக்காக வழக்குத் தொடரப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து, நீதிமன்ற நேரத்தை வீணடித்ததாக மனுதாரருக்கு ரூ.50,000 அபராதம் விதித்தும் உத்தரவிட்டனர்.
மேலும் வாசிக்க: மருத்துவ படிப்புக்கான 50% இடஒதுக்கீடு வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு