மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஆயுள் முழுவதும் இலவச ரேஷன் வழங்கப்படும்.. மேற்கு வங்க அரசு தொடர்ந்து மேற்கு வங்க மக்களால் ஆளப்படும்.. வெளி மாநிலத்தவர்கள் அல்லது குஜராத்தைச் சேர்ந்தவர்களால் ஆளப்படாது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அதிரடியாக அறிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தில் 1993 ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் ஆட்சிக்கு எதிராகப் போராடிய இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் 13 பேர் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் உயிர் இழந்தனர். இந்த நாளான ஜூலை 21 ஆம் தேதி ஆண்டுதோறும் தியாகிகள் தினமாக திரினாமூல் காங்கிரஸ் கட்சி அனுசரிக்கிறது.

இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக வீடியோ கான்பரன்ஸ் மூலம் உரை நிகழ்த்திய மம்தா, “மத்திய அரசு வங்காளத்தின் வளங்களை அபகரித்துவிட்டது. மாநிலத்திற்கு நடந்த அநீதிக்காக பாஜகவுக்கு மக்கள் தகுந்த பதில் தருவார்கள் என்று கூறினார்.

நாடு முழுவதும் கொரோனாவுக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கும்போது, பாஜக மோடி அரசோ, மத்திய அரசின் முகவர்களையும் பண அதிகாரத்தையும் பயன்படுத்தி எதிர்க்கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்களில் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களை கவிழ்ப்பதில் தீவிரமாக இருக்கிறது. நாடு இதுவரை கண்டிராத அழிவு கட்சியாக பாஜக திகழ்கிறது எனக் குற்றம் சாட்டினார்.

மேலும் வாசிக்க: பொதுத்துறை வங்கிகளும் தனியார் வசமா.. மோடி அரசின் புதிய தனியார்மயக் கொள்கை

அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபைத் தேர்தலில் திரினாமூல் காங்கிரஸ் மீண்டும் வெற்றி பெறும் என்று குறிப்பிட்ட மம்தா பானர்ஜி, நாங்கள் வென்றால் ஆயுள் முழுக்க இலவச ரேஷன் வழங்கப்படும் என்று உறுதி அளித்தார்.

மேலும் மேற்கு வங்க அரசு தொடர்ந்து மேற்கு வங்க மக்களால் ஆளப்படும் என்றும் வெளி மாநிலத்தவர்கள் அல்லது குஜராத்தைச் சேர்ந்தவர்களால் ஆளப்படாது. ஓட்டுகளை வாங்குவதற்கு நோட்டுகளை அள்ளி வீசும் பாஜக.வுக்கு, மேற்கு வங்க மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்” என்று மம்தா எச்சரித்தார்.