கொரோனா பாதிப்பைவிட, நாட்டில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் படும் அவதிகள், மரணங்கள் குறித்து தினந்தோறும் வெளிவரும் செய்திகளே நெஞ்சைப் பதறவைக்கும் வகையில் அமைகிறது.
அந்த வகையில், ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் மாவட்டத்தில் உள்ள ராரா என்ற கிராமத்தில் பணியாற்றி வரும் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த முகமது இக்பால் என்பவர், 250 கிலோ மீட்டர்கள் தொலைவில் உள்ள தன்னுடைய சொந்த ஊரான பரேலிக்கு செல்ல முயன்றிருக்கிறார்.
அதற்காக ராரா கிராமத்தில் உள்ள சாஹாப் சிங் என்ற நபரின் சைக்கிளை அனுமதியேதுமின்றி எடுத்த இக்பால், மனமுவந்து மன்னிப்புக் கடிதமும் எழுதி வைத்திருக்கும் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மேலும் வாசிக்க: ‘சுய சார்பு இந்தியா’ திட்டத்தில் பொதுத்துறை தனியார்மயமாதல், ஒவ்வொரு வகுப்புக்கும் ஒரு டிவி சேனல்- அதிரடி அறிவிப்பு
இதுதொடர்பாக இக்பால் எழுதியுள்ள கடிதத்தில், ‘நான் உங்கள் குற்றவாளி. ஆனால், உதவிகிட்டாத தொழிலாளியாவேன். என்னை மன்னித்துவிடுங்கள். உங்கள் சைக்கிளை எடுத்துக்கொள்கிறேன். சொந்த ஊருக்குச் செல்ல என் குழந்தையால் நடக்க இயலாது என்பதால் வேறு வழி தெரியவில்லை, பரேலிக்கு செல்ல வேண்டும்’ எனக் குறிப்பிட்டிருந்தது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு, தொழிலாளர்கள் வாழ்க்கையில் எவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதற்கு இச்சம்பவம் ஒரு உதாரணம் மட்டுமே.
புலம்பெயர் தொழிலாளர்களுக்கான அனைத்து வசதிகளையும் அரசு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது என்று கூறினாலும் அவை அனைத்தும் இதுபோன்ற தொழிலாளர்களும் சென்று சேர மத்திய, மாநில அரசுகள் உறுதிசெய்ய வேண்டும் என்பதே பலரின் கோரிக்கையாக உள்ளது.