உலகிலேயே முதல் முறையாக, அமெரிக்காவில் மனிதருக்கு மரபணு மாற்றப்பட்ட பன்றியின் இதயத்தைப் பொருத்தி, இதய மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

மருத்துவ உலகம் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வந்தாலும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை இன்றும் சவாலாகவே இருந்து வருகிறது. எனினும் உலகம் முழுவதும் பல்வேறு ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் உலகிலேயே முதல் முறையாக மனிதர் ஒருவருக்குப் பன்றியின் இதயம் வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் மருத்துவ உலகம் ஒரு புதிய சாதனையை எட்டியுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் பென்னட், உடல் நலக் குறைவு ஏற்பட்டு கடந்த ஆறு வாரங்களாகப் படுத்த படுக்கையாக இருந்துள்ளார். இதனையடுத்து மருத்துவமனையில் அவரை பரிசோதனை செய்தபோது அவருக்கு இதயநோய் இருப்பது தெரியவந்தது.

மேலும் இதயம் பலவீனமாக இருந்ததால், இதயத்தை மாற்றினால் மட்டுமே அவரால் உயிருடன் இருக்க முடியும். அதேபோல் பென்னட்டிற்கு மனிதர்களின் இதயத்தைப் பொருத்துவதிலும் சிக்கில் இருந்தது. இதனால் மருத்துவர்கள் குழுவினர் முதலில் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தனர்.

பின்னர் பன்றியின் இதயத்தைப் பொருத்தலாம் என முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து டேவிட் பென்னட்டிடம் மருத்துவக்குழு தெரிவித்துள்ளது. இதற்கு அவர் சம்மதம் தெரிவித்தார். அதேபோல் அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகமும் அனுமதியளித்தது. இதையடுத்து டேவிட் பென்னட்டிற்கு இதய மாற்று அறுவை சிகிச்சை கடந்த வெள்ளிக்கிழமையன்று நடைபெற்றது.

கிட்டத்தட்ட ஏழு மணி நேரத்திற்கு மேல் இந்த அறுவை சிகிச்சை நடைபெற்றது. இதில் வெற்றிகரமாகப் பன்றியின் இதயத்தை டேவிட் பென்னட்டிற்கு பொருத்தி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். தற்போது அவர் நலமுடன் மருத்துவர்கள் கண்காணிப்பில் தொடர் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இந்த அறுவை சிகிச்சைக்குக் குறித்து மருத்துவர் பார்ட்லி க்ரிபித் கூறுகையில், “இந்த அறுவை சிகிச்சை மாற்று உறுப்பு பற்றாக்குறை நெருக்கடியைத் தீர்ப்பதற்கு இதுபோன்ற சாதனைகள் பயன்படும். பன்றியின் உறுப்புகளை மனித உடம்பு ஏற்காமல் போவதற்குக் காரணமாக இருக்கும் மூன்று மரபணுக்களைப் பன்றியின் உடலிலிருந்து மருத்துவர்கள் நீக்கியுள்ளனர்.

பன்றியின் இதய திசுவை தேவைக்கு மேல் வளரச் செய்யும் மரபணுவையும் மருத்துவர்கள் நீக்கியுள்ளதோடு, பன்றியின் உறுப்பை மனித உடல் ஏற்பதற்காக, ஆறு மனித மரபணுக்களை பன்றியின் உடலில் செலுத்தியுள்ளனர். அதன்பிறகே பன்றியின் இதயம் டேவிட் பென்னடுக்கு பொருத்தப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே கடந்த அக்டோபர் 2021 அன்று, நியூயார்க்கில் மூளைச்சாவு அடைந்த ஒருவருக்குப் பன்றியின் சிறுநீரகத்தை பொருத்தி சாதித்திருந்தனர். தற்போது பன்றியின் இதயம் பொருத்தப்பட்டு சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இப்படி மருத்துவ உலகம் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் அடுத்த நிலைக்குச் சென்றுவிட்டது என்பதை இந்நிகழ்வுகள் நமக்குக் காட்டுகின்றன.