மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெ ஜெயலலிதாவுக்கும் அவருடைய நெருங்கிய சொந்தங்களுக்கும் இடையிலான உறவு அத்தனை சுமுகமாக இருந்ததில்லை என்பது அனைவரும் அறிந்ததே
 
அந்த சுமுகமின்மைக்கான காரணம் ஜெயலலிதாவைச் சுற்றி ஆக்ரமித்த மன்னார்குடி குடும்பத்தின் ஆதிக்கம் மட்டுமே என்பதாகவே பலரது நினைப்பும் இன்று வரை நீடிக்கிறது.
 
ஆனால், உண்மை அது மட்டுமே அல்ல.. ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலியை ஒட்டி தனியார் டிவிக்கு தனது அத்தையைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளும் போது ஜெயலலிதாவின் மாமா மகள் தெரிவித்த விஷயம் என்னவென்றால்,
 
‘அத்தை முதன்முறையாக அரசியலில் காலூன்றி ஜெயிக்கும் வரைக்கும் வெகு ப்ரியமாகவும், சுமுகமாகவும் அவர் எங்களுடன் பழகினார். ஆனால், அதிமுகவின் செயலாளராக ஜெயித்த பிறகு அவருக்கும், எங்களுக்குமான இடைவெளி அதிகரிக்கத் தொடங்கியது.
 
ஏனென்றால் உறவினர்களில் என் அப்பா உட்பட பலருக்கும் அவர் அரசியலில் ஈடுபடுவது பிடிக்காமல் இருந்த காரணத்தால் அவர் எங்களைப் புறக்கணிக்க ஆரம்பித்திருக்கலாம்.
 
அவருடனான உறவில் விரிசல் விழுந்ததற்கான காரணமாக வேறு யாரையும் குறிப்பிடுவதைக் காட்டிலும் அவரே தான் காரணமாக இருந்தால் என்று தான் எனக்குச் சொல்லத் தோன்றுகிறது. ஏனென்றால் குடும்பத்தில் அவரது தலைமுறை சார்ந்த உறவினர்களின் இறப்பைக் கூட கண்டுகொள்ளாமல் அவர் இருந்த போது பிறகு எங்களையெல்லாமா அவர் பொருட்படுத்தப் போகிறார். அதனால் விலகி இருப்பதே நல்லது என்ற முடிவுக்கு வந்து விட்டோம்.
 
அவர் தயவில் வாழ வேண்டிய கட்டாயம் எங்களுக்கு இல்லாத காரணத்தால் நாங்களும் அவரைத் தள்ளி நின்று பார்த்தோமே தவிர போய் ஒட்டிக் கொள்ள நினைக்கவில்லை.’ என்பதாக ஜெயலலிதாவின் மாமா மகள் தனது கருத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.