லக்னோவில் மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வு எழுதியதில் நடந்த மோசடியில் 25 மாணவர்களுக்கு தொடர்பு உள்ளதாக, தேசிய தேர்வு முகமைக்கு உத்தரப் பிரதேச காவல்துறையினர் அறிக்கை அனுப்பியுள்ளனர்.

நாடு முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு கடந்த செப்டம்பர் 12 ஆம் தேதி நடந்தது. நீட் நுழைவுத் தேர்வை 16.14 லட்சம் மாணவர்கள் எழுதினார்கள். இந்த நீட் தேர்வில் பல்வேறு குளறுபடிகள், மோசடிகள் நடைபெற்றுள்ளதாக மாணவர்கள் பலரும் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் உத்தரப் பிரதேசத்தில் ஒரு தேர்வு மையத்தில் மாணவர் ஒருவர் வரவில்லை. அந்த மாணவருக்கு பதிலாக ஆள்மாறாட்டம் செய்து மோசடி நபர் ஒருவர் தேர்வு எழுதவிருந்தது தெரியவந்தது. மாணவர்களிடம் இருந்து 50 லட்சம் ரூபாய் பெற்று, மருத்துவம் படிக்கும் மாணவர்கள் மற்றும் நிபுணர்களை தேர்வு எழுத வைக்கும் மோசடி அம்பலமானது.

சிபஐ விசாரணையில், மஹாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள ஒரு பயிற்சி மையம் இந்த மோசடியை செய்தது தெரிந்தது. இந்நிலையில் நீட் நுழைவுத் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமைக்கு, உத்தரப் பிரதேச காவல்துறையினர் அறிக்கை ஒன்றை அனுப்பிஉள்ளனர்.

அதில், உத்தரப் பிரதேசத்தில் மட்டும் 25 மாணவர்கள் இவ்வாறு ஆள்மாறாட்ட மோசடியில் ஈடுபட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த மாணவர்களின் தேர்வு முடிவுகளை நிறுத்தி வைக்கவும் அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த செப்டம்பர் மாதம் மகாராஷ்டிராவில் நீட் தேர்வில் மாபெரும் மோசடி நடைபெற்றுள்ளதை மத்திய புலனாய்வு பிரிவு (சிபிஐ) கண்டுபிடித்துள்ளது. மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஆர்.கே.எஜூகேசன் கேரியர் கைடன்ஸ் பயிற்சி மையம் இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

இதுபோன்று நீட் தேர்வில் பல்வேறு மோசடிகள், குளறுபடிகள் நடைபெற்றுள்ளது வெளிவரும் நிலையில், மும்பை உயர் நீதிமன்றம் நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதித்து பிறப்பித்திருந்த உத்தரவை ரத்து செய்த உச்ச நீதிமன்றம், நாடு முழுவதும் இளநிலை நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தேசிய தேர்வு முகமைக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.