வீரசாவர்க்கர் நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்டார் என்பது மறுக்க முடியாத உண்மை. வீரசாவர்க்கர் பெயர் பொறித்த கல்லை புதுச்சேரியில் உள்ள தியாக சுவரில் பதித்ததில் எந்த தவறும் இல்லை என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

நாட்டின் 75வது சுதந்திர ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, சுதந்திரப் போராட்ட வரலாறு குறித்தும் விடுதலை போராட்ட வீரர்கள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக நாடு முழுவதும் ஒரு அரசு சாரா அமைப்பு சார்பில் 75 இடங்களில் தியாகப் பெருஞ்சுவர்கள் நிறுவப்பட்டு வருகின்றன.

அதன் முதல் சுவர் புதுச்சேரியில் அமைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி கடற்கரை சாலை காந்தி திடல் அருகே நிறுவப்பட்டுள்ள தியாக சுவரில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் பெயர்கள் பதிக்கப்பட்டு வருகின்றன.

சமீபத்தில் அதில் வீரசாவர்க்கர், வீரமங்கை வேலுநாச்சியார் ஆகியோரின் பெயர் பலகைகளை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பதித்தார்.

இதனையடுத்து, சுதந்திர போராட்டத்திற்கு எந்த பங்களிப்பும் அளிக்காத சாவர்க்கர் பெயரை தியாக சுவரில் பதிக்கக்கூடாது என பல்வேறு சமூக அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தியாக சுவரில் சாவர்க்கர் பெயர் பலகை திறக்கப்பட்டதை கண்டித்து சில அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. அந்த அமைப்புகளைக் கண்டித்து பாஜக சார்பிலும் போராட்டம் நடைபெற்றது.

இந்நிலையில் சாவர்க்கர் குறித்து புதுவையில் செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், “நாட்டின் விடுதலைக்காக போராடிய வீரசாவர்க்கர் 10 ஆண்டுகள் தனிமை சிறையில் இருந்துள்ளார். அவர் நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்டார் என்பது மறுக்க முடியாத உண்மை.

நாட்டின் சுதந்திரத்திற்காக ஒரு நாள் போராடினால் கூட அவர்களை கொண்டாட வேண்டும். வீரசாவர்க்கர் பெயர் பொறித்த கல்லை புதுச்சேரியில் உள்ள தியாக சுவரில் பதித்ததில் எந்த தவறும் இல்லை. இதை யாரும் அரசியல் ஆக்க வேண்டாம். அப்படி அரசியல் ஆக்கினால்கூட அதனை எதிர்கொள்ள தயார். தேசத்தை பற்றி தெரியாதவர்கள் தான் வீரசாவர்க்கரை எதிர்ப்பார்கள்” என்று ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் வகையில் சாவர்க்கர் எதிர்ப்பு குழுவினர் நகரில் போராட்டம் நடத்தினர். சாவர்க்கர், துணை நிலை ஆளுநர் தமிழிசை, சட்டப்பேரவை தலைவர் செல்வம் ஆகியோரின் உருவ படங்களை அவர்கள் தீயிட்டுக் கொளுத்தி தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்தனர்.