புதுடெல்லியில் தடையை மீறி பட்டாசு வெடித்த பீகார் வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். டெல்லியில் பழைய பட்டாசுகளை விற்கவும், வெடிக்கவும் உச்ச நீதிமன்றம் கடந்த 31ம் தேதி தடை விதித்தது.

நாடு முழுவதிலும் சில கட்டுபாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்ட போதும், டெல்லியில் மட்டும் மாசு ஏற்படுத்தாத பசுமை ரக பட்டாசுகளை மட்டுமே வெடிக்க உத்தரவிட்டது. இதையடுத்து உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த மத்திய மோடி அரசின் கிழே வரும் டெல்லி போலிஸ் தீவிர நடவடிக்கையில் இறங்கியது.

இதற்காக கண்காணிப்பு குழுக்களை அமைத்தது. இந்நிலையில், கிழக்கு டெல்லியில் மயூர் விஹார் பேஸ்-2ல் இளைஞர் ஒருவர் பட்டாசுகளை வெடிப்பதாக கடந்த 1ம் தேதி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு விரைந்த போலீசார், 30 வயது இளைஞரை கைது ெசய்தனர். இவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தாமன் தீப் என்பதும், அவர் பிஜ்லி பாம் என்ற பட்டாசுகளை வெடித்ததும் தெரிய வந்தது.

வெடிக்கப்பட்ட பட்டாசுகளின் மாதிரிகளை பறிமுதல் செய்து அவற்றை பரிசோதனைக்கு போலீசார் அனுப்பினர். அவை பசுமை பட்டாசுகள் அல்ல என்பது ஆய்வில் உறுதி செய்யப்பட்டது. இந்த பட்டாசுகளை கடந்த ஆண்டு வாங்கியதாகவும் போலீசாரிடம் தாமன் தீப் கூறினார். இவர் மீது இந்திய தண்டனை சட்டம் 188ன் கீழ் வழக்குப் பதியப்பட்டுள்ளது.