உலகின் மிக உயரமான செனாப் ரயில் பாலம் இந்தியாவில் கட்டமைப்பட்டு வரும் நிலையில், கட்டுமானப் பணியை அடுத்த ஆண்டுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் பக்கால், காரி பகுதிகளுக்கு இடையே செனாப் நதியின் குறுக்கே உலகின் மிக உயரமான ரயில்வே பாலம் கட்ட கடந்த 2002-ம் ஆண்டில் முடிவு செய்யப்பட்டு, பாலம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டன.

ஆனால் பாலத்தின் உறுதித் தன்மையில் கேள்வி எழுந்ததால் கடந்த 2009-ல் பணிகள் நிறுத்தப்பட்டன. இதன்பின் கடந்த 2010-ல் மீண்டும் பாலத்தின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டு விறுவிறுப்படைந்துள்ளது.

இது காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியை இந்தியாவின் பிற பகுதிகளுடன் இணைக்கிறது. 1.315 கி.மீ. நீளம் கொண்ட இந்த பாலத்தின் உயரம் 359 மீட்டராகும். இப்பாலத்தின் பிரமாண்டமான வளைவு வடிவ அமைப்பு அமைக்க 5,462 டன் எஃகு பயன்படுத்தபட்டுள்ளது. அதிகபட்சமாக மணிக்கு 260 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் காற்றை தாங்கக் கூடிய திறன் பெற்றுள்ள வகையில் உருவாக்கப்பட்டு வருகிறது.

 

கடந்த ஓராண்டாகவே உலகின் மிக உயரமான ரயில்வே பாலத்தை கட்டும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக ரயில்வே பாலத்தின் பணிகள் வரும் 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நிறைவு பெற்று ரயில்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கொங்கன் ரயில்வே தலைவர் கூறுகையில், இந்திய ரயில்வேயின் 150 ஆண்டுகால வரலாற்றில் மேற்கொள்ளப்பட்ட காஷ்மீர் ரயில் இணைப்பு திட்டத்தின் மிகவும் சவாலான பணியாக இந்த பாலம் அமைக்கப்படுகிறது. இருப்பினும், இது முடிந்ததும், இது ஒரு பொறியியல் அற்புதமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் உருவாகும் உலகின் மிக உயரமான செனாப் ரயில் பாலம், உலக அதிசயங்களில் ஒன்றான பாரிசில் 324 மீட்டர் உயரம் உள்ள ஈஃபிள் டவரை விடப் பெரியது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க: அக்டோபரில் கொரோனா தடுப்பு மருந்து ரெடி… முதல் நாடாக அறிவித்த ரஷ்யா