பல்வேறு மாநிலங்களில் அறிவிக்கப்பட்டுள்ள இலவச திட்டங்களால், இலங்கையில் ஏற்பட்டுள்ளதை போன்று இந்தியாவிலும் பொருளாதார நெருக்கடி உருவாகும் என பிரதமர் மோடியிடம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நல்லாட்சியை வழங்க, நிர்வாகத்தில் மேம்பாட்டைக் கொண்டுவர ஆலோசனைகளை வழங்குமாறு பிரதமர் மோடி, பிராந்திய வாரியாக 6 குழுக்களை அமைத்துள்ளார். அந்தக் குழுவில் பல்வேறு துறை செயலர் அந்தஸ்தில் உள்ள அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர்.
இந்நிலையில், நேற்றிரவு (3.4.2022) நடந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பிரதமரின் முதன்மைச் செயலர் பிகே மிஷ்ரா, கேபினட் செயலர் ராஜீவ் கவுபா ஆகியோர் பங்கேற்றனர்.
அப்போது பிரதமர் மோடி, “பற்றாக்குறைகளை சமாளிக்க திட்டம் போடுவதை விடுத்து அதிகப்படியானவற்றை நிர்வகிக்க திட்டம் தீட்டுங்கள். பெரிய வளர்ச்சித் திட்டங்களை முன்னெடுக்க புதிய கண்ணோட்டத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்” என்று அதிகாரிகளுக்கு கூறியுள்ளார்.
அப்போது அதிகாரிகள் சிலர், “சட்டசபை தேர்தல் நடந்து முடிந்த மாநிலம் உள்பட பல்வேறு மாநிலங்களில் அறிவிக்கப்பட்டுள்ள இலவச திட்டங்கள் பொருளாதார ரீதியாக நீடிக்க முடியாதவை. இத்திட்டங்கள் மூலம் இலங்கையில் ஏற்பட்டதை போல் பொருளாதார நெருக்கடி நம் நாட்டிலும் ஏற்படக்கூடிய அபாயம் உள்ளது” என்று பிரதமர் மோடியிடம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.