இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட்டுள்ள நிலையில் இரவு நேர ஊரடங்கை கடுமையாக அமல்படுத்துமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
உலக மக்களின் வாழ்க்கையை தடம் புரள செய்துள்ள கொரோனா இந்தியாவில் 50 நாட்களுக்கான ஊரடங்கிற்கு பிறகு அதிதீவிரமாக பரவிவருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6,088 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து புதிய உச்சம் தொட்டுள்ளது. இதனால் எண்ணிக்கை 1,20,532-ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையும் 49,872-ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,605 பேர் ஆகவும் அதிகரித்துள்ளது.
மேலும் வாசிக்க: ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை, நினைவு இல்லமாக மாற்ற எடப்பாடி அவசர சட்டம்
இதனிடையே நோய் பரவல் வேகம் எடுத்துள்ள நிலையில் மாநிலங்களில் முழுமையான அளவில் ஊரடங்கை கடைபிடிக்கவில்லை என்று உள்துறை அமைச்சகம் கவலை தெரிவித்துள்ளது. இது மோசமாக விளைவுகளை ஏற்படுத்தும் என எச்சரித்துள்ள அமைச்சகம், இரவு நேர ஊரடங்கை கடுமைப்படுத்தி நோய் பரவலை தடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
மேலும் இனிமேல் நாடு முழுக்க மாஸ்க் அணிவது கட்டாயம். பொது இடங்களில் எச்சில் துப்பக் கூடாது என்றும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், சென்னையில் இன்று பேட்டியளித்த மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன், இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் முகக்கவசம் அணியாமல் பயணித்தால் ரூ.500 அபராதம் வசூலிக்கப்படும். அதேபோல, முககவசம் அணியாமல் நடந்து வந்தால் ரூ.100 அபராதம் வசூலிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். .