மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி- மகன் தரணிதரன் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்று 3756 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,22,350 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 64 பேர் பலியாகி உள்ளனர். சென்னையில் மட்டும் இன்று 1261 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இதுவரை 10க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் என பலரும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

முன்னதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில், தற்போது மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, அவரது மகன் தரணிதரன் இருவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியானதால், இருவரும் சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் வாசிக்க: 2ஆம் இடத்தைப் பிடித்த தமிழகம்… சமூக பரவல் இல்லையெனக் கூறும் எடப்பாடி…

அமைச்சர் தங்கமணிக்கு கொரோனாவுக்கான அறிகுறிகள் எதுவும் தென்படாததால் நேற்று வரை அவர் தனது வழக்கமான பணிகளை கவனித்து வந்தார். தலைமைச் செயலகத்தில் தனது துறை சார்பாக ரூ.5 கோடிக்கான காசோலையை முதல்வர் பழனிசாமியிடம் வழங்கினார். நேற்றைய முன் தினம் அதிமுக தலைமைக்கழகத்தில் நடைபெற்ற ஐவர் குழு ஆலோசனைக் கூட்டத்திலும் பங்கேற்றுள்ளார்.