தமிழகத்தில் 3-வது நாளாக கொரோனா பாதிப்பு 2,000-த்தை தாண்டியுள்ளது. தமிழகத்தில் ஒரே நாளில் 2,115 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு, இன்று மட்டும் 41 பேர் பலியாகி உள்ளனர்.

இந்தியாவில் கொரோனா பதிப்பில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில உள்ளது. தமிழகத்தில் கடந்த 3 நாட்களாக ஒரே நாளில் 2,000-த்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 54,449 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று 41 பேர் பலியாகியுள்ள நிலையில், கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 666 ஆக உயர்ந்திருக்கிறது. கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 1630 பேர் இன்று குணமடைந்து வீடுகளுக்கு திரும்பினர். இதனையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 30,271 ஆக உள்ளது.

தமிழக மாவட்டங்களில் சென்னையில் தான் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. சென்னையில் இன்று மட்டும் 1,322 பேருக்கு கொரோனா உறுதியானது. சென்னையில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையானது மொத்தம் 38,327 ஆக அதிகரித்திருக்கிறது. செங்கல்பட்டில் இன்று 95 பேருக்கு கொரோனா உறுதியானது.

மேலும் வாசிக்க: நடிகர் ரஜினி வீட்டிற்க்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவனா..

திருவள்ளூர் மாவட்டத்தில் 85 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 39 பேருக்கும் கொரோனா பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் பெரம்பலூர் தவிர அனைத்து மாவட்டங்களிலும் இன்று கொரோனா பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அலுவலகத்தில் பணியாற்றும் முதல்வர் அலுவலக துணை செயலர், அலுவலக உதவியாளர்கள் 2 பேர், ஓட்டுநர் ஒருவர் என மொத்தம் 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.