பாதுகாப்புத்துறை அமைச்சரான நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தில் நீண்ட நேரம் பேசினார், ஆனால் என்னுடைய கேள்விக்கு பதிலளிக்கவில்லை என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.
 
பிரான்ஸ் நாட்டில் இருந்து ரபேல் போர் விமானங்களை வாங்குவது தொடர்பான ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டுகிறது.
 
இதுதொடர்பாக பாராளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றது. விவாதத்தின் மத்தியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு, பா.ஜனதா அமைச்சர்கள் அருண் ஜெட்லி, நிர்மலா சீதாராமன் இடையே கடும் விவாதம் நடைபெற்றது. அப்போது ராகுல் காந்தி பின்வரு கேள்விகளை எழுப்பினார்:
 
பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தும் காங்கிரஸ், விமானங்களின் எண்ணிக்கை 36 ஆக குறைக்கப்பட்டது ஏன்?
 
விலை ரூ. 500 கோடியிலிருந்து ரூ.1,600 கோடியாக உயர்த்தப்பட்டது ஏன்?
 
இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்திற்கு பதிலாக, தனியார் நிறுவனமான அனில் அம்பானியின் ‘ரிலையன்ஸ் டிபன்ஸ்’ நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டது ஏன்? என்று சரமரியாக கேள்விகளை எழுப்பியுள்ளது.
 
இக்கேள்விகளுக்கு பிற கட்சிகளின் முக்கியமாக பாஜகவின் கூட்டணி கட்சிகளின் ஆதரவும் உள்ளது.
 
“இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தின் முன்னாள் சிஎம்டி ரபேல் விமானங்களை இந்தியாவில் தயாரிக்கலாம். அரசின் நகர்வு சரியானது கிடையாது. ஒப்பந்தத்திலிருந்து இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தை நீக்கியது ஏன்?” என சிவசேனா கேள்வி எழுப்பியது.
 
இதே கேள்வியை பிஜு ஜனதா தளம் எழுப்புகிறது. இன்றைய விவாதத்தின்போது நிர்மலா சீதாராமன் மிகவும் காரசாரமாக பேசினார். ரபேல் விமானங்கள் வாங்க வெளிப்படைத்தன்மையுடன் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 
36 விமானங்கள் தவிர மற்ற அனைத்து விமானங்களுக்கும் மேக் இன் இந்தியா திட்டம் பொருந்தும். ரபேல் விவகாரத்தில் நானும் பிரதமரும் பொய் சொல்கிறோமா? பிரதமரை தரக்குறைவாக பேசுவதற்கு யாருக்கும் எந்த உரிமையும் இல்லை என்றார் சீதாராமன்.
 
ரபேல் விமானத்தின் விலையில் ஏன் மாற்றம் செய்யப்பட்டது? அனில் அம்பானிக்கு ஒப்பந்தம் வழங்க கட்டாயப்படுத்தியது யார்? ஒப்பந்தத்தில் அனில் அம்பானி சேர்க்கப்பட்டது எப்படி? என்று கேள்விகளை எழுப்பினார் ராகுல் காந்தி. இவ்விவகாரத்தில் மோடி மீதுதான் குற்றம்சாட்டுகிறேன், மனோகர் பாரிகர் மீது அல்ல என்றும் குறிப்பிட்டார்.
 
பாராளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, “ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக நான் எழுப்பிய கேள்விகளுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜி பதிலளிக்கவில்லை, அவர் அனில் அம்பானியின் பெயரைகூட பயன்படுத்தவில்லை.
 
விவாதத்தின் முடிவில் இரண்டு கேள்விகளை எழுப்பினேன், ஆம் அல்லது இல்லையென்று பதில் கோரினேன். விமான ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டவர்கள் யார்? (விமானப்படை தளபதி, பாதுகாப்புத்துறை அமைச்சர், செயலாளர்கள் விமானப்படை அதிகாரிகள்) பிரதமர் மோடி தாமாகவே ஒப்பந்தம் செய்தபோது விமானப்படை அதிகாரிகள் எதிர்ப்பை பதிவு செய்தார்களா? என்றுதான்.
 
இதற்கு பதில் அளிப்பதற்கு பதிலாக, நிர்மலா சீதாராமன் பெரும் நாடகத்தை அவையில் ஏற்படுத்திவிட்டார். நீங்களும் பார்த்து இருப்பீர்கள்.
 
நான் அவரை அவமதித்துவிட்டதாகவும், பொய்யர் என கூறிவிட்டதாகவும் கூறினார். நிர்மலா சீதாராமன் இரண்டு மணிநேரம் பேசியுள்ளார், ஆனால் என்னுடைய கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை என கூறியுள்ளார்.