தமிழ் சினிமாவை எதார்த்தத் தளத்திற்கு கொண்டு சென்றதில் முக்கியமானவர் இயக்குனர் பாரதிராஜா.
சமீபத்தில் தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத் தலைவராக அனைவராலும் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டு பதவியில் இருந்துவந்த நிலையில் இன்று தீடீரென்று தன் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் புதிய தலைவரை தேர்வு செய்ய ஜூலை 14ஆம் தேதி தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டிருந்து.
இந்த நிலையில் தற்போது இயக்குனர் சங்க தேர்தல் நடைபெறும் தேதி திடீரென மாற்றப்பட்டுள்ளது. இயக்குனர் சங்க தேர்தல் ஜூலை 14ஆம் தேதிக்கு பதில் ஜூலை 21 ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
தனது பதவியை ராஜினாமா செய்தது குறித்து பாரதிராஜா வெளியிட்ட அறிக்கையில், ஜனநாயக முறைப்படி தலைவரை தேர்ந்தெடுக்க வசதியாக பதவியை ராஜினாமா செய்கிறேன். தேர்தலில் போட்டியிடாமல் ஒருமனதாக தேர்வானதால் ஏற்படும் சங்கடங்கள் உருவாகுவதை தவிர்ப்பதற்காகவே இதைச் செய்துள்ளேன்.மூத்த இயக்குனராக சங்க வளர்ச்சிக்கு எனது வழிகாட்டுதலும், பேரன்பும் தொடரும் என்று தெரிவித்துள்ளார்
இயக்குனர் சங்க தலைவர் பதவிக்கு மீண்டும் பாரதிராஜா போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. மேலும் இயக்குனர் சங்க நிர்வாகிகள் பதவிக்கு போட்டியிடுவார் என்று கருதப்பட்ட சேரன் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருப்பதால் அவரால் போட்டியிட முடியாத நிலை உள்ளது. இருப்பினும் அவரது பெயர் வெளியேறும் பட்டியலில் இருப்பதால் இந்த வாரம் ஞாயிறு அன்று அவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து ஒருவேளை வெளியேறினால், தேர்தலில் போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இயக்குனர் சங்க தேர்தலில் ஒரு தலைவர், 2 துணைத் தலைவர்கள், 1 பொதுச் செயலாளர், 1 பொருளாளர், 4 இணைச்செயலாளர்கள் மற்றும் 12 செயற்குழு உறுப்பினர்கள் பதவிகளுக்கும் தேர்தல் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.