மும்பையில் தேசியப் பங்குச்சந்தையின் முன்னாள் நிர்வாக இயக்குநரும், தலைமை செயல் அதிகாரியுமான சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
தேசியப் பங்குச்சந்தை பங்குச் சந்தைகளின் ஒழுங்காற்று மையமான செபி, கடந்த சில தினங்களுக்கு முன்னர் தேசியப் பங்குச் சந்தையின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியான சித்ரா ராமகிருஷ்ணா மீது குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது தேசிய அளவில் பேசுபொருளாகி உள்ளது.
கடந்த 2013 முதல் 2016 ஆம் ஆண்டு வரை தேசியப் பங்குச்சந்தையின் தலைமை செயல் அதிகாரியாகவும், அதன் நிர்வாக இயக்குநராகவும் இருந்தவர் சித்ரா ராமகிருஷ்ணா. பின்னர் அவர் தனிப்பட்ட காரணங்களால் பதவியை ராஜினாமா செய்வதாகக் கூறி பணியிலிருந்து விலகினார்.
இந்நிலையில், தனது பணிக்காலத்தில் சித்ரா ராமகிருஷ்ணன் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக செபி குற்றம்சாட்டியுள்ளது. தேசியப் பங்குச்சந்தையின் வணிக திட்டங்கள், பங்குச் சந்தையின் ஏற்றம், இறக்கம் குறித்த கணிப்புகள், ரகசியங்கள் என பலவற்றையும் இமயமலையில் வசிக்கும் சாமியார் ஒருவருடன் சித்ரா ராமகிருஷ்ணா பகிர்ந்து கொண்டதாக செபி குற்றம் சாட்டியுள்ளது.
பங்குச்சந்தை வர்த்தகத்தின் அன்றாட நடவடிக்கையிலும் சாமியார் சித்ரா ராமகிருஷ்ணா மூலம் பங்கு பெற்றிருக்கிறார். அந்த சாமியார் கொடுத்த அறிவுரைகளை பின்பற்றி பல்வேறு முடிவுகளை எடுத்துள்ளார். பல்வேறு ரகசியங்களை சித்ரா ராமகிருஷ்ணா அந்த சாமியாருக்கு பகிர்ந்துள்ளார்.
சித்ரா ராமகிருஷ்ணா தனது விளக்கத்தில் சாமியாரோடு மின்னஞ்சல் தொடர்பு மட்டும் இருந்ததாகவும், நேரில் சந்தித்தத்தில்லை என்றும் கூறியிருக்கிறார். ஆனால் அவர் கங்கைக் கரையில் அந்த சாமியாரை 20 வருடங்களுக்கு முன்பு சந்தித்திருப்பதையும், செஷல்ஸ் தீவில் அவரோடு கடலில் குளித்ததையும் மின்னஞ்சல் மூலம் செபி அம்பலப்படுத்தியிருக்கிறது.
செஷல்ஸ் தீவின் கடலில் குளியல் போட்டு கடற்கரையில் ஓய்வெடுக்கலாம்; இடையில் புகார் பிரச்சினை வந்தபோது சிங்கப்பூர் அல்லது ஹாங்காங் வழியாக செஷல்ஸ் தீவு செல்ல ஏற்பாடு செய்வதாக சாமியார் கூறியுள்ளதாகவும், இமெயிலில் அவரது சிகை அலங்கார குறித்தும் சாமியார் வர்ணித்ததாகவும் செபி தெரிவித்துள்ளது.
இதுமட்டுமின்றி, அந்த சாமியாரின் விருப்பப்படி மூத்த அதிகாரியாக ஆனந்த் சுப்ரமணியன் என்பவரையும் சித்ரா நியமித்திருந்தார். என்எஸ்இ-யில் தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்குவதற்கு முன்பு, ஆனந்த் சுப்ரமணியம் ஒரு சாமானிய மனிதராக, பால்மர் லாரி மற்றும் ஐசிஐசிஐ குழுமத்தின் ஒரு கூட்டு நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அங்கு, அவரது ஆண்டு ஊதிய பேக்கேஜ் ரூ.14 லட்சத்தை விட சற்று அதிகமாக இருந்தது.
ஏப்ரல் 2013ல், அவருக்கு என்எஸ்இ-யில் எம்.டி மற்றும் சிஇஓ-வின் தலைமை வியூக ஆலோசகராக (சிஎஸ்ஏ) என்ட்ரி கொடுக்கப்பட்டது. அப்போது அவருக்கு ரூ.1.38 கோடி வருடாந்திர பேக்கேஜ் வழங்கப்பட்டது. 2016 ஆம் ஆண்டுக்குள், அதாவது இரண்டு மூன்று ஆண்டுகளில் சுப்பிரமணியத்தின் ஊதியத் தொகுப்பு ரூ 4.21 கோடியாக உயர்த்தப்பட்டது.
சுப்ரமணியத்திற்கு மூலதனச் சந்தையில் அனுபவம் இல்லை. இருப்பினும் அவருக்கு சம்பள உயர்வு, பதவி உயர்வுகள் தொடர்ந்து கிடைத்தன. ஆனந்த் சுப்பிரமணியத்தை விதிகளை மீறி இவர் தலைமை செயல்பாட்டு அதிகாரியாக நியமனம் செய்ததும், அவருக்கு தன்னிச்சையாக பதவி உயர்வு கிடைத்ததும் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
என்எஸ்இ-யின் தணிக்கைக் குழுவின் விசாரணைக்குப் பிறகு, சுப்ரமணியத்தின் நியமனம் தவறான முறையில் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. விசாரணை அறிக்கையில் ஆய்வுக்குப் பிறகு, சுப்ரமணியம் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. அடுத்த ஒரு மணி நேரத்தில் சுப்ரமணியம் ராஜினாமா செய்தார்.
இதனைத்தொடர்ந்து சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு 3 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ள செபி, இனி வரும் 3 ஆண்டுகளுக்கு பங்கு சந்தை தொடர்பான நடவடிக்கைகளில் அவர் ஈடுபடக் கூடாது எனவும், செபியிடம் பதிவு செய்துள்ள நிறுவனத்தில் இடைத்தரகராக பணிபுரிய கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளது. மேலும் சித்ரா ராமகிருஷ்ணா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சித்ரா பதவியில் இருந்த காலத்தில் தினசரி 49 கோடி வர்த்தக நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாக இருந்திருக்கிறார். இதன் மதிப்பு தினசரி 64 ஆயிரம் கோடி ரூபாய் என கூறப்படுகிறது. இத்தனை ஆயிரம் கோடி வர்த்தகத்தையும் சித்ரா மூலம் கட்டுப்படுத்தி ஊழல் செய்தும், செய்ய வைத்தும் இருக்கிறார் அந்த சாமியார். சாமியார் சிபாரிசு செய்த ஆனந்த் சுப்ரமணியன் தான் அந்த சாமியாரா என்றும் கேள்வி எழுந்துள்ளது.
காரணம் ஆனந்த் சுப்ரமணியன் மனித உளவியலில் பரிச்சயம் கொண்டவர் என்றும், அவர்தான் இமயமலை சாமியாராக புனைந்து சித்ராவை தன் விருப்பப்படி ஆட்டி வைத்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. 2018 ஆம் ஆண்டில் தேசியப் பங்குச் சந்தை, செபிக்கு ஒரு கடிதம் அளித்திருக்கிறது. அதில் மனித உளவியலில் நன்கு பரிச்சயம் கொண்ட ஆனந்த் சுப்ரமணியன் தான் அந்த சாமியார் என்றும், அவரே சாமியார் பெயரில் சித்ராவை கைப்பாவையாக நடத்தியிருக்கிறார் என்றும் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில், சித்ரா ராமகிருஷ்ணன் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மும்பையில் உள்ள அவரது வீடு, அலுவலகம் அவருக்குத் தொடர்பான இடங்களில் சோதனை நடந்து வருகிறது. வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக இந்தச் சோதனை நடைபெறுவதாக வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.