ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு வரும் வேளையில், கடந்த நான்கு நாட்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேச அளவில் கடந்த மார்ச் 16-ம் தேதி தான் கடைசியாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்பட்டது. அதன்பின் கொரோனா வைரஸ் பரவல், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி போன்றவற்றால் விலையில் எந்த மாற்றத்தையும் எண்ணெய் நிறுவனங்கள் செய்யவில்லை.

கடந்த 82 நாட்களில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் படுவீழ்ச்சி அடைந்தபோது, இந்தியாவில் மட்டும் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றத்தையும் கொண்டு வரவில்லை. பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கவும் இல்லை.

தற்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரத்தொடங்கியதால், இந்தியாவில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருகிறது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மாதம் இரண்டு முறை, சர்வதேச அளவில் விற்கப்படும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமலில் இருந்தது. இந்த நடைமுறை சுமார் 15 ஆண்டுகளாக அமலில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

மத்திய பாஜக ஆட்சியில் நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமலுக்கு வந்தது. மேலும் இதன் பொறுப்பு எண்ணெய் நிறுவனங்களின் கையில் ஒப்படைக்கப்பட்டது. இதனால் பெரும்பாலும் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாக நேரிடுகிறது.

மேலும் வாசிக்க: டிஜிட்டல் மூலம் நாங்கள் பிரசாரம் செய்வதை உங்களால் தடுக்க முடியாது.. அமித்ஷா விமர்சனம்

இந்நிலையில் சென்னையில் இன்றைய பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 35 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ.77.43ஆக விற்கப்படுகிறது.

இதேபோல் டீசல் விலை 39 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.70.13 என்ற விலையில் விற்கப்பட்டு வருகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த விலை உயர்வு வாகன ஓட்டிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.