உத்தரப் பிரதேச மாநிலம் புலந்தர்ஷர் மாவட்டத்தில் கடந்த திங்கள்கிழமை இஸ்லாமியர்கள் பசு இறைச்சி வெட்டியதாக கூறி பஜ்ரங்தள் உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மிகப் பெரும் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது.
 
அந்த வன்முறையின் போது, காவல் ஆய்வாளர் சுபோத் குமார் சிங் என்பவர் சுட்டு கொல்லப்பட்டார். மேலும் ஒரு இளைஞரும் இந்த வன்முறையில் உயிரிழந்தார்.
 
இந்த வன்முறைச் சம்பவம் தொடர்பாக காவல்துறையிர் 90 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதில், 28 பேர் மீது பெயருடன் குறிப்பிடப்பட்டுள்ளது. பெயர் குறிப்பிடப்பட்டவர்கள், பா.ஜ.க, யுவமோட்சா, வி.எச்.பி, பஜ்ரங்தள் அமைப்பைச் சேர்ந்தவர்கள்.
 
இந்த நிகழ்வு மாநிலத்தைத் தாண்டி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இருப்பினும் இந்த விவகாரம் தொடர்பாக மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் எதுவும் பதிலளிக்காமல் இருந்தார்.
 
உத்தரப் பிரதேச மாநிலம் புலந்தர்ஷர் மாவட்டத்தில் நடைபெற்ற வன்முறையில் காவல் ஆய்வாளர் சுபோத் குமார் சிங் கொல்லப்பட்ட நிகழ்வு ஒரு விபத்து என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்த பதிலாஇ பெரும் சர்ச்சையை வெடித்துள்ளது
 
இந்த வன்முறைச் சம்பவம் தொடர்பான காவல்துறை அறிக்கையில், ‘புலந்தர்ஷர்-கார்முகடேஸ்வர் மாநில நெடுஞ்சாலையில் நடைபெற்ற இஸ்லாமியர்கள் பேரணியில் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கில் இந்த வன்முறை நிகழ்வு திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றும் .
 
சாயானா கிராமத்தில் பசு இறைச்சி வெட்டப்பட்டத்தைப் பார்த்ததாக பஜ்ரங்தள் மாவட்டத் தலைவர் யோகேஷ் ராஜ் கூறியது தூண்டி விடப்பட்ட நிகழ்வு என்றும்.,
 
மேலும், இந்துத்துவ கும்பல்களின் செயல்பாடுகள் எப்படியாவது வன்முறையை ஏற்படுத்திவிடவேண்டும் என்ற நோக்கில் இருந்தது’ என்றும் காவல்துறையினரின் ஆய்வு அறிக்கை இப்படி உள்ளநிலையில்,
 
உத்தரப் பிரதேச மாநிலம் புலந்தர்ஷரில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பாக காவல்துறை தயாரித்த ஆய்வு அறிக்கைக்கு நேர்மாறாக அம்மாநில முதல்வர் விளக்கம் அளித்துள்ளார்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பான ஆதித்யநாத்தின் பதில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தெரிவித்த அவர், ‘காவல் ஆய்வாளர் உயிரிழந்தது கும்பல் வன்முறை இல்லை. அது ஒரு விபத்து. இதற்கு காரணமான அனைவரும் தண்டிக்கப்படுவார்கள். யாரும் மன்னிக்கப்படமாட்டார்கள்’ என்று தெரிவித்தார்.
 
ஏற்கெனவே, இந்த விவகாரம் தொடர்பாக யோகியின் செயல்பாடுகள் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியிருந்தன.
 
அவருடைய மாநிலத்தில் வன்முறை ஏற்பட்டு காவல் ஆய்வாளர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள நிலையில், அந்த விவகாரத்தைக் கவனிக்காமல் தெலங்கானா மற்றும் ராஜஸ்தானில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார்.
 
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக காவல் அதிகாரிகளுடன் நடந்தக் கூட்டத்தில் காவல் ஆய்வாளர் கொல்லப்பட்டது குறித்து பேசாமல், பசு இறைச்சியை வெட்டியவர்களை உடனடியாகக் கைது செய்யவேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.
 
இதனால் மேலும் கடுமையான விமர்சனங்கள் எழுந்த பிறகே, உயிரிழந்த காவல் ஆய்வாளர் குடும்பத்தைச் சந்தித்தார். இன்று, காவல் ஆய்வாளர் கொல்லப்பட்ட நிகழ்வு விபத்து என்று கூறியிருப்பது வன்முறை சம்பவம் தொடர்பாக காவல்துறை தயாரித்துள்ள அறிக்கைக்கு முற்றிலும் நேர்மாறாக உள்ளது.
 
இது அம்மாநில காவல் துறையினரை அதிர செய்துள்ளதாக எஜன்ஸி செய்திகள் தெரிவிக்கின்றன