எத்தியோப்பியாவில் நிகழ்ந்த விமான விபத்து எதிரொலியாக, இந்தியாவிலும் போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த ரக விமானங்களின் இயக்கம் உடனடியாக நிறுத்தப்படுகிறது.
 
ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்திடம் 12 போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்களும், ஜெட்ஏர்வேஸ் நிறுவனத்திடம் 5 விமானங்களும் உள்ளன.
 
இதுதொடர்பாக விமான போக்குவரத்துத் துறை அமைச்சகம், சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், பயணிகளின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்து, விமானப் போக்குவரத்து தலைமை இயக்குநரகம் இந்த முடிவை மேற்கொண்டுள்ளது.
 
போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்களின் செயல்பாட்டில் பாதுகாப்பு அம்சங்கள் உறுதி செய்யப்படும் வரையில் அந்த விமானங்களின் இயக்கம் நிறுத்தி வைக்கப்படும். இந்த விவகாரத்தில், சர்வதேச விமான போக்குவரத்து நிறுவனங்கள், விமான தயாரிப்பாளர்களுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு கூறுகையில், இந்த தடையால் பயணிகளுக்கு சிரமம் ஏற்படுவதை தவிர்க்க செயல்திட்டத்தை உருவாக்குமாறு, விமான போக்குவரத்துத் துறை செயலருக்கு அறிவுறுத்தியுள்ளேன்.
 
மேலும், அனைத்து விமான போக்குவரத்து நிறுவனங்களுடன் அவசர ஆலோசனை நடத்தவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.
 
எத்தியோப்பியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை போயிங் 737 மேக்ஸ் 8 ரக பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில், 4 இந்தியர்கள் உள்பட 157 பேர் உயிரிழந்தனர்.
 
முன்னதாக, இந்தோனேசியாவில் கடந்த ஆண்டு அக்டோபரில் இதே ரக விமானம் விபத்துக்குள்ளானதில் 189 பேர் உயிரிழந்தனர்.
 
இதையடுத்து, எத்தியோப்பியா, சீனா, ஆஸ்திரேலியா, பிரேசில், பிரான்ஸ், பிரிட்டன், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் அந்த ரக விமானங்களுக்கு அடுத்தடுத்து தடை விதித்தன. தற்போது இந்தியாவும் அந்த பட்டியலில் இணைந்துள்ளது.
 
இதனிடையே, போயிங் 737 மேக்ஸ் 8 விமானத்தில் பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்வதற்காக மென்பொருளில் மாற்றம் செய்யவிருப்பதாக அந்த நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.