பாகிஸ்தான் நாட்டின் பெஷாவரில் நடைபெற்ற குண்டு வெடிப்பு தாக்குதலில் இதுவரை 63 பேர் உயிரிழந்துள்ளனர், 150-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இத்தாக்குதலுக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் தற்போது கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. அந்நியச் செலாவணி கையிருப்பு குறைந்து, அரசு திவாலாகும் நிலையில் இருப்பதால் சர்வதேச செலாவணி நிதியத்தின் உடனடி உதவியையும் நாடியுள்ளது.

இந்நிலையில் அந்நாட்டின் முக்கிய நகரான பெஷாவரில் குண்டு வெடிப்பு தாக்குதல் நடந்துள்ளது. பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்கவா மாகாணத் தலைநகர் பெஷாவரில் பாதுகாப்பு மிகுந்த போலீஸ் லைன் பகுதி உள்ளது. இங்குள்ள மசூதியில் நேற்று மதியம் மக்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அங்கு சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இதில் மசூதி கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதனையடுத்து காவல் துறையினரும், மீட்பு படையினரும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

குண்டுவெடிப்பில் காயம் அடைந்தவர்கள், இடிபாடுகளில் சிக்கியவர்கள் மீட்கப்பட்டு பெஷாவர் நகரின் லேடி ரீடிங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் இதுவரை 63 பேர் உயிரிழந்துள்ளனர், 150-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். பலர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

குண்டுவெடிப்பு நிகழ்ந்த மசூதி, நகரின் காவல் துறை தலைமையகம் அமைந்துள்ள வளாகத்தில் உள்ளது. தொழுகையில் காவல் துறையினர் அதிகம் பங்கேற்றுள்ளனர். இதனால், உயிரிழந்தவர்களில் பலரும் காவல் துறையினர் என்று கூறப்படுகிறது.

மேலும் தொழுகையின்போது, முதல் வரிசையில் இருந்த ஒருவர் தனது உடலில் பொருத்தியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்ததாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

இத்தாக்குதலுக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தாக்குதலில் தொடர்பு உடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார். மேலும் குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு முன்னாள் பிரதமர் இம்ரான் கானும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டி அமைந்துள்ள பெஷாவர் நகரில் தீவிரவாத தாக்குதல் அடிக்கடி நடந்து வருகிறது. இங்கு தலிபான் அமைப்பினர் கடந்த காலங்களில் இதுபோன்ற கொடூர தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலுக்கு தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (டிடிபி) என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

இந்த அமைப்பினர் ஆப்கானிஸ்தானில் தற்போது ஆட்சியில் உள்ள தலிபான்களுடன் நெருக்கமாக உள்ளனர். பாகிஸ்தானில் இஸ்லாமிய சட்டங்களை இன்னும் கண்டிப்புடன் நடைமுறைப்படுத்த வலியுறுத்தி இந்த அமைப்பு கடந்த 15 ஆண்டுகளாக போரிட்டு வருகிறது.

மேலும் இந்த அமைப்பு பாகிஸ்தான் அரசுடன் செய்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை கடந்த நவம்பரில் முறித்துக் கொண்டது. அதன் பிறகு, பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்துள்ளது. இதற்கு முன்பு பெஷாவரில் கடந்த 22 ஆம் தேதி ஒரு காவல் நிலையம் அருகே குண்டுவெடிப்பு நடந்தது. எனினும் உயிரிழப்பு ஏதும் இல்லை.

அதேபோல் பெஷாவரில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஷியா முஸ்லிம்களின் மசூதி ஒன்றில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. வெள்ளிக்கிழமை தொழுகையின்போது நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 58 பேர் உயிரிழந்தனர். 200-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.