இந்திய அணியின் வீரர்களின் மனதை சரியாக பராமரிக்க அணியில் நிரந்தரமாக மனவள பயிற்சியாளர் இடம்பெற வேண்டியது அவசியம் என்று முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி தெரிவித்துள்ளார்.
மனவள பயிற்சி குறித்த ஒரு அமைப்பை முன்னாள் கிரிக்கெட் வீரர் பத்ரிநாத் துவக்கியுள்ளார். இதுகுறித்து தோனி கூறுகையில், “இந்தியாவில் மனநலம் குறித்த சிக்கல்களை ஒப்புக்கொள்வதில் மிகப்பெரிய பலவீனம் உள்ளதாக கருதுகிறேன். நான் பேட்டிங் செய்ய களமிறங்கும் போது, முதல் 5 முதல் 10 பந்துகளை எதிர்கொள்ளும் போது, என இதயதுடிப்பு மாறுபடும்.
நானும் நெருக்கடியை உணர்வேன். கொஞ்சம் பயமாகவும் இருக்கும். இது சிறு பிரச்சனை தான். ஆனால் பல நேரத்தில் இது போன்ற சிக்கலை நாம் பயிற்சியாளரிடம் கூற தயங்குவோம். அதனால் தான் விளையாட்டியில் பயிற்சியாளர் மற்றும் வீரர்களுடனான பந்தம் மிகவும் முக்கியமானது.
மேலும் வாசிக்க: ரோஹித் சர்மாவின் பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடும் ரசிகர்கள்
தற்போது மனநல பயிற்சியாளர் வெறும் 15 நாட்கள் மட்டுமே அணியுடன் உள்ளார். அப்படி அவர் 15 நாட்கள் மட்டும் வரும் போது அவரிடம் வீரர்களால் வெறும் அனுபவங்களை மட்டுமே பகிர்ந்து கொள்ள முடியும். அதனால் எப்போது ஒரு மனநல பயிற்சியாளர் அணி வீரர்களுடன் இருப்பது கட்டாயம். அதன் மூலம் விளையாட்டின் எந்த பகுதிகள் பாதிக்கப்படுகிறது என்பதை உணர்ந்து செயல்பட முடியும்” என்று கூறியுள்ளார்.
இதேபோல இந்திய வீரர்களின் மனநலம் குறித்து தற்போதைய கேப்டன் விராட் கோலி கூறுகையில், “என்னைப் பொறுத்தவரையில் மனஆரோக்கியம் மற்றும் மன தெளிவு வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது. இது வெறும் விளையாட்டின் ஒரு பகுதி மட்டுமல்ல வாழ்க்கையிலும் மிகவும் அவசியம்” என்றார்.
தமிழக வீரர் அஸ்வினும் இதே கருத்தை வலியுறுத்தியுள்ளார். அனைத்து வீரர்களுக்கும் மனவளம் சிறப்பாக இருக்க வேண்டியது அவசியம் என்று குறிப்பிட்டுள்ளார்.