இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடா அல்லது மதரீதியாக பிளவுபட்டதா.. நாட்டில் ஹிஜாப் அணிவதற்காகவும், கோயில்களில் வேட்டி கட்டுவதற்காகவும் போராடுவது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது என சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் ஒரு பொது நல மனுத்தாக்கல் செய்தார். அதில், கடந்த 1947 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட தமிழ்நாடு ஆலய பிரவேச சட்டத்தில், இந்துக்கள் அல்லாதோர் கோவில்களுக்குள் நுழைய அனுமதியில்லை எனக் கூறப்பட்டுள்ளது.
கடந்த 1970 ஆம் ஆண்டு இந்துக்கள் அல்லாதோரும் கோவிலுக்குள் நுழைய அனுமதிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட சட்டத்தை உயர் நீதிமன்றம், 1972 ஆம் ஆண்டு ரத்து செய்தது. ஆனால், பிற மதத்தைச் சேர்ந்தவர்களும், வெளிநாட்டவர்களும் கோவிலுக்குள் நுழைய அனுமதிக்கப்படுகின்றனர்.
எந்த சட்டப்பூர்வமான உரிமையும் இல்லாத நிலையில், இந்துக்கள் அல்லாதோர் கோவில்களுக்குள் நுழைய அனுமதியில்லை என்ற விளம்பர பலகைகளை நுழைவாயில்களில் வைக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும். மேலும் அந்த விளம்பரப் பலகையில் கோயிலுக்கு வரும் போது இது போன்ற ஆடைகள் அணிந்து வரவேண்டும் என்று விளம்பரப்பலகையில் சுட்டிக்காட்ட வேண்டும்” என்று கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் ரங்கராஜன் நரசிம்மன், “கோவில் மரபுபடி உடை அணிந்து வர வேண்டும். தஞ்சை, மதுரை போன்ற கோவில்களில் பிற மதத்தவர்கள் லுங்கி, டவுசர் அணிந்து வருகின்றனர். இதற்கும், வெளிநாட்டவர்கள் கோவிலுக்குள் நுழைவதை அனுமதிக்க தடை விதிக்க வேண்டும்” என்று வாதிட்டார்.
அப்போது நீதிபதிகள், “பல கோவில்களில் உரிய நடைமுறைகளும் மரபுகளும் பின்பற்றப்படுகிறது. மதசார்பற்ற நாட்டில் ஹிஜாப் அணிவதற்காகவும், கோயில்களில் வேட்டி கட்டுவதற்காகவும் போராடுவது அதிர்ச்சி அளிக்கிறது. இந்தியா ஒரு மதசார்பற்ற நாடா அல்லது மத ரீதியாக பிளவுபட்டதா? என கேள்வி எழுப்பினர்.
அனைத்து கோவில்களிலும் ஒரே மாதிரியான மரபு பின்பற்றப்படுகிறதா? ஆகம சாஸ்திரத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது? குறிப்பிட்ட உடை தான் அணிய வேண்டும் என மரபு உள்ளதா? எந்த கோவிலில் அந்த மரபு உள்ளது?
அநாகரிகமாக உடை அணிந்து வருவதாக புகார் உள்ளதா? ஆகம சாஸ்திரத்தில் வேட்டி தான் அணிய வேண்டும் என கூறப்பட்டுள்ளது என்பதற்கு ஆதாரங்கள் உள்ளதா?” என்றும் நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த ரங்கராஜன் நரசிம்மன், “தற்போது அதுசம்பந்தமான ஆதாரங்கள் இல்லை. அதை தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
இதனையடுத்து தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், “கோவில்களில் ஆடை கட்டுப்பாடு விதித்து உயர் நீதிமன்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு ரத்து செய்துள்ளது.
இருப்பினும் சுசீந்திரம் தாணுமாலய பெருமாள் கோவில் மற்றும் சில தென்மாவட்ட கோவில்களில் ஆண் பக்தர்கள், மேலாடை அணிய கூடாது என்ற ஆடைக் கட்டுப்பாடு அமலில் உள்ளது. அதேபோல் இந்து அல்லாதோர், கொடி மரத்தை தாண்டி கோவில்களுக்குள் நுழைய தடை விதிக்கும் மரபு இன்னும் பல கோவில்களில் அமலில் உள்ளது” கூறினார்.
இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், மதச்சார்பற்ற நாட்டில் இதுபோன்ற பிரச்சினைகளை ஏற்படுத்த கூடாது. மனுதாரரின் கோரிக்கை மத ரீதியாக நாட்டை பிளவுபடுத்துவது போன்றதாக உள்ளதாக கருத்து தெரிவித்து, மனுவுக்கு இரு வாரங்களில் பதிலளிக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.