இங்கிலாந்துக்கு எதிரான 4வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியை, இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது இந்திய அணி.

இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 205 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை ஆடிய இந்திய அணியில், ரிஷப் பண்ட் (101) வாஷிங்டன் சுந்தர் (96 அவுட் இல்லை) ஆகியோர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வலுவான அடித்தளம் அமைத்தனர். இதனால் இந்திய அணி 365 ரன்கள் குவித்தது.

பின்னர் 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி, ஆரம்பம் முதலே இந்திய சுழற்பந்துவீச்சில் தடுமாறியது. 65 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது. ஜோ ரூட், டான் லாரன்ஸ் ஆகியோர் சற்று தாக்குப்பிடித்து விக்கெட்டை காப்பாற்ற போராடினர்.

கடைசி வரை போராடிய டான் லாரன்ஸ் அதிகபட்சமாக 50 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார். இதனால் இங்கிலாந்து அணியால், 135 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. மொத்தம் 54.5 ஓவர்கள் தாக்குப்பிடித்த இங்கிலாந்து அணி, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, இந்தியாவிடம் பெரிய தோல்வியைப் பெற்றது.

இதன்மூலம் இந்திய அணி, இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அத்துடன் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. இந்த வெற்றியின் மூலம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

வாக்காளர்களுக்கு டிஜிட்டல் மூலம் பணப்பட்டுவாடா செய்வது கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம்