வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா ஆகியவை மக்களவை மற்றும் மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே நிறைவேற்றப்பட்டது.

குறிப்பாக, மாநிலங்களவையில் இம்மசோதா தாக்கல் செய்யப்பட்ட போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

மசோதாக்கள் மீது டிவிசன் ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை அவையின் துணைத் தலைவர் ஹரிவன்ஸ் நிராகரித்தார். கூச்சல், குழப்பத்திற்கு இடையே குரல் வாக்கெடுப்பு மூலமாக மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

இதனால் அதிருப்தி அடைந்த எதிர்க்கட்சி எம்பி.க்கள் நாடாளுமன்ற நடத்தை விதி புத்தகத்தை கிழித்தெறிந்து ஆவேசம் அடைந்தனர். இதற்கு கண்டனம் தெரிவித்து நடத்தை விதிகளுக்கு புறம்பாக நடந்து கொண்டதாக, எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 8 எம்பி.க்கள் கூட்டத்தொடர் முழுவதிலும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

https://www.facebook.com/MKStalin/posts/1745749608918235

அவர்களை மீண்டும் அவையில் அனுமதிக்க வலியுறுத்தி, எதிர்க்கட்சியை சேர்ந்த பெரும்பாலான எம்பி.க்கள் நேற்றும், நேற்று முன்தினமும் இரு அவைகளையும் புறக்கணித்தனர்.

இந்த நிலையில்  எதிர்க்கட்சி எம்பிக்கள் இல்லாமலேயே அரசு பல்வேறு முக்கிய மசோதாக்களை இரு அவையிலும் நிறைவேற்றியது.

அதோடு, கொரோனா பரவல் காரணமாக மாநிலங்களவை தேதி குறிப்பிடாமல் நேற்று ஒத்திவைக்கப்பட்டது. வேளாண் மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிலையில், அடுத்ததாக ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கையெழுத்திட்டதும் அவை சட்டமாக அமல்படுத்தப்படும்.

எனவே, எஞ்சியிருக்கும் கடைசி வாய்ப்பு ஜனாதிபதியிடம் முறையிடுவது மட்டுமே. இதனால், விவசாயிகளுக்கு விரோதமான இரு வேளாண் மசோதாக்களிலும் கையெழுத்திடக் கூடாது என அனைத்து எதிர்க்கட்சிகளும் ஜனாதிபதியிடம் நேற்று முறையிட முடிவு செய்தன.

இது தொடர்பாக காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட 18 எதிர்க்கட்சிகள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு கடிதம் எழுதியுள்ளன.

மேலும், ஜனாதிபதியை நேரில் சந்தித்து முறையிடவும் அனுமதி கேட்கப்பட்டிருந்தது. இதன்படி, 18 எதிர்க்கட்சிகள் சார்பில் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவரான காங்கிரசின் குலாம் நபி ஆசாத் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்தை நேற்று மாலை நேரில் சந்தித்து பேசினார்.

அப்போது, மசோதாக்களை திருப்பி அனுப்ப வேண்டும் என வலியுறுத்தி ஜனாதிபதியிடம் எதிர்க்கட்சிகள் சார்பில் மனு அளிக்கப்பட்டு உள்ளது.

ஜனாதிபதியை சந்தித்த பின் பேட்டி அளித்த குலாம் நபி ஆசாத் கூறிய விவரம் பின்வருமாறு :

வேளாண் மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு முன்பாக அனைத்து கட்சிகள், விவசாய அமைப்புகளின் தலைவர்களிடம் அரசு கருத்து கேட்டிருக்க வேண்டும்.

அதே போல் நாடாளுமன்றத்தில் டிவிசன் வாக்கெடுப்பு நடத்தி மசோதாவை நிறைவேற்றியிருக்க வேண்டும். குரல் வாக்கெடுப்பு நடத்தி இருக்கக் கூடாது.

இந்த விஷயத்தில் ஜனநாயகத்தின் கோயிலான நாடாளுமன்றத்தில் அரசியலமைப்பு நசுக்கப்பட்டுள்ளது. எனவே, அரசியலமைப்புக்கு உட்பட்டு இந்த மசோதாக்கள் நிறைவேற்றப்படவில்லை என்பதை ஜனாதிபதியிடம் தெளிவுபடுத்தி உள்ளோம்.

அதோடு, இவ்விரு மசோதாக்களையும் திருப்பி அனுப்ப வேண்டும் எனவும் அவரிடம் வலியுறுத்தி மனு தரப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

[su_spacer]

சமுகவலைதளத்தில் வைரலாகி வரும் கார்டூன்

[su_spacer]

மேலும் வேளாண் மசோதாவை எதிர்த்து அரசியல் கட்சி தலைவர்கள் மட்டுமின்றி நாடு முழுவதும் விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த விஷயத்தில் ஆளும் பாஜ.வின் கூட்டணி கட்சிகளும் சில அதிருப்தியில் உள்ளன.

எனவே, வேளாண் மசோதாக்களுக்கு வழக்கம் போல் ஜனாதிபதி ஒப்புதல் அளிப்பாரா அல்லது நாடாளுமன்றத்திற்கே திருப்பி அனுப்புவாரா என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாடாளுமன்றத்தின் இரு அவையிலும் நிறைவேற்றப்பட்ட மசோதாவை திருப்பி அனுப்பவும், அதை மறுபரிசீலனை செய்ய அறிவுறுத்தவும் ஜனாதிபதிக்கு அதிகாரம் உண்டு.

அவ்வாறு திருப்பி அனுப்பப்படும் மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் திருத்தம் செய்து நிறைவேற்றலாம் அல்லது எந்த திருத்தமும் இல்லாமல் அப்படியே கூட நிறைவேற்றலாம்.

அப்படி திருத்தமின்றி நிறைவேற்றப்பட்டு மீண்டும் ஜனாதிபதிக்கு மசோதா அனுப்பப்பட்டால் அதற்கு ஜனாதிபதி தனது ஒப்புதலை அளித்தே தீர வேண்டும். இதனால் மக்கள் மன்றத்தை நாட எதிர்கட்சிகள் முடிவு எடுத்து இருப்பதாக தகவல்

8 வழிச்சாலை அமைப்பதில் அவசரம் காட்டும் மத்திய, மாநில அரசுகள்; வலுக்கும் போராட்டம்