இந்தியா உள்பட 9 நாடுகளில் டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் பரவியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருந்த நிலையில், இந்தியாவில் டெல்டா பிளஸ் கொரோனா 6 மாவட்டங்களில் 22 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது.
சீனாவில் 2019 ஆம் ஆண்டு இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறி வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
முதலில் இந்தியாவில் கண்டறியப்பட்ட B.1.617.1 வைரஸுக்கு காப்பா என்றும், B.1.617.2 வைரசுக்கு டெல்டா என்றும் உலக சுகாதார நிறுவனத்தால் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த டெல்டா வைரஸ் தான் இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலைக்கு முக்கிய காரணமாக அமைந்தது என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே, இந்த டெல்டா வைரஸ் தற்போது உருமாறி, டெல்டா-பிளஸ் கொரோனா வைரஸ் ‘B.1.617.2.1’ என அழைக்கப்படுகிறது. இந்தப் புதிய உருமாறிய வைரஸ், கொரோனா வைரசின் ஸ்பைக் புரதத்தில் ‘கே417என்’ பிறழ்வால் வகைப்படுத்தப்படுகிறது.
இந்தியா உள்பட 9 நாடுகளில் டெல்டா-பிளஸ் கொரோனா பரவியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை 6 மாவட்டங்களில் 22 பேருக்கு டெல்டா-பிளஸ் கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதில் மகாராஷ்ட்ராவின் ரத்னகிரி மற்றும் ஜல்கான் மாவட்டங்களிலும், கேரளாவில் பாலக்காடு மற்றும் பத்தினம்திட்டா மாவட்டங்களிலும், மத்தியப்பிரதேசத்தின் போபால் மற்றும் சிவபுரி மாவட்டங்களிலும் டெல்டா பிளஸ் வகை வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வறண்ட இருமல், காய்ச்சல், உடல் சோர்வு மற்றும் வலி, தோல் வெடிப்பு, கால்விரல்கள் மற்றும் விரல்கள் நிறமாற்றம், தொண்டை வலி, வெண்படல அழற்சி, சுவை மற்றும் வாசனை இழப்பு, வயிற்றுப்போக்கு மற்றும் தலைவலி, மார்பு வலி, மூச்சுத் திணறல், பேச்சு இழப்பு, வயிற்று வலி, குமட்டல், பசியின்மை, வாந்தி, மூட்டு வலி, காது கேளாமை ஆகியவையே டெல்டா பிளஸ் வைரஸ் அறிகுறிகள் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில், டெல்டா-பிளஸ் கொரோனா கவலை தரக்கூடியது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வகைப்படுத்தியுள்ளது. மேலும், டெல்டா-பிளஸ் கொரோனா பரவியுள்ள இடங்களில் போதுமான தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மாநில அரசுகளை அறிவுறுத்தியுள்ளது.
மேலும் பல்வேறு மாநிலங்களில் பரவி வருவதால், டெல்டா பிளஸ் மாறுபாடு எதிர்வரும் மாதங்களில் இந்தியாவில் 3வது அலையை கட்டவிழ்த்து விடக்கூடும் என்று சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
‘மல்டி ஸ்டார்’ பொருளாதார ஆலோசனைக் குழு; முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி