லட்சத்தீவில் ஒன்றிய அரசால் நிர்வாகியாக நியமிப்பட்டுள்ள பிரஃபுல் கோடா படேல் பிறப்பித்த உத்தரவுக்கு கேரள உயர்நீதிமன்றம் அதிரடியாக தடை விதித்துள்ளது.

இந்தியாவின் யூனியன் பிரதேசமான லட்சத்தீவு கேரளா மாநிலத்தின் கடலோரத்தில் இருந்து சுமார் 200 கி.மீ தூரத்தில் அரபிக்கடலில் அமைந்துள்ளது. லட்சத்தீவில் சுமார் 65 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். இயற்கை அழகு நிரம்பி வழியும் லட்சத்தீவில் சுற்றுலாத் துறை, மீன்பிடி பிரதானமான தொழிலாக உள்ளது.

ஒன்றிய மோடி அரசால் லட்சத்தீவில் நிர்வாகியாக நியமிப்பட்டுள்ள குஜராத்தைச் சேர்ந்த பிரஃபுல் கோடா படேல் அங்குள்ள மக்களுக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான லட்சத்தீவில் மாட்டிறைச்சிக்கு தடை, பள்ளிகளில் அசைவ உணவுக்கு தடை, மதுபான விற்பனைக்கு அனுமதி, தனக்கு சாதகமான அரசு ஊழியர்களை நியமித்து வருவது, சாலைகளை விரிவுபடுத்துவதற்கு மீனவர்களின் குடிசையை அகற்ற உத்தரவிடுதல் என பிரஃபுல் கோடா படேல் தன்னிச்சையாக பல்வேறு நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதற்கு அரசியல் கட்சி தலைவர்களும், பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து பிரஃபுல் கோடா படேலை ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் லட்சத்தீவில் பிரஃபுல் கோடா படேல் எடுக்கும் நடவடிக்கைக்கு எதிராக கேரள உயர்நீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் குவிந்துள்ளன.

இது தொடர்பான வழக்கு கேரள உயர்நீதிமன்றத்தில் 22-06-2021 விசாரணைக்கு வந்தது. அப்போது பிரஃபுல் கோடா படேல் பிறப்பித்த பள்ளிகளில் மாட்டிறைச்சிக்கு தடை விதித்தல் மற்றும் பால் பண்ணைகள் மூடல் ஆகிய 2 உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக உரிய விளக்கம் அளிக்க பிரஃபுல் கோடா படேலுக்கு உத்தரவிட்ட நீதிமன்றம் வழக்கு விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்தது.

முன்னதாக லட்சத்தீவு நீதித்துறை அதிகார வரம்பு கேரள உயர்நீதிமன்றத்தில் இருந்து வருகிறது. லட்சத்தீவு தொடர்பான எந்த ஒரு வழக்கையும் கேரள உயர்நீதிமன்றம் தான் விசாரித்து வருகிறது. இந்நிலையில் லட்சத்தீவு நீதித்துறை அதிகார வரம்பு எல்லையை கேரளாவில் இருந்து கர்நாடகா உயர்நீதிமன்றத்துக்கு மாற்ற பிரஃபுல் கோடா படேல் பரிந்துரை செய்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

தற்போது பிரஃபுல் கோடா படேலுக்கு எதிராக கேரள உயர்நீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் குவிந்துள்ளன. இதனை மனதில் வைத்தே லட்சத்தீவு நீதித்துறை அதிகார வரம்பு எல்லையை கர்நாடகா உயர்நீதிமன்றத்துக்கு மாற்ற பிரஃபுல் கோடா படேல் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ஒன்றிய அரசை விமர்சித்ததாக நடிகை மீது தேச துரோக வழக்கு- லட்சத்தீவில் அரங்கேறும் அவலம்