டெல்லியில் போட்டியிடும் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து,  புதுடெல்லி தொகுதியில் உள்ள மோதி நகரில் கட்சியின் தலைவர் கெஜ்ரிவால் பிரசாரம் செய்தார்.
 
வேட்பாளர், தொண்டர்கள் படையுடன் திறந்த ஜீப்பில் அவர் வாக்கு சேகரித்துக் கொண்டிருந்தார். அப்போது, பிரசாரத்தை கேட்க  திரண்டிருந்த கூட்டத்தில் இருந்து சிவப்பு டி-ஷர்ட் அணிந்த ஒருவர் திடீரென ஜீப்பில் தாவி ஏறினார்.
 
அதில் இருந்தவர்கள் சுதாரிப்பதற்குள் கெஜ்ரிவாலின் கன்னத்தில் ‘பளார்’  என அறைந்தார்.அதை சிறிதும் எதிர்பாராத கெஜ்ரிவால் சிறிது நேரம் திகைத்து நின்று விட்டார். சுதாரித்துக் கொண்ட தொண்டர்கள், தாக்கிய நபரை பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர்.
 
இது பற்றி காவல் துறை மேற்கு துணை கமிஷனர் மோனிகா பரத்வாஜ்  கூறுகையில், ‘‘கன்னத்தில் அறைந்தவர் கைலாஷ் பூங்கா வட்டாரத்தில் உதிரிபாக கடை வைத்துள்ளார்.
 
அவர் பெயர் சுரேஷ் (33). கெஜ்ரிவாலை அவர் எதற்காக தாக்கினார்? அதன் பின்னணியில் இருப்பவர்கள் யார்? என விசாரிக்கப்பட்டு  வருகிறது,’’ என்றார்.இது பற்றி பேட்டியளித்த டெல்லி துணை முதல்வர் சிசோடியா, ‘‘இந்த கோழைத்தனமான தாக்குதலின் பின்னணியில் பாஜ இருக்கிறது.
 
கெஜ்ரிவால் கொலை செய்ய வேண்டும் என மோடியும், அமித் ஷாவும் விரும்புகிறார்களா?’’ என  ஆவேசப்பட்டார். கன்னத்தில் அறை, ஷூ வீச்சு, இங்க் தெளிப்பு என அரை டஜனுக்கு குறையாமல் கெஜ்ரிவால் பலவித அவமதிப்பு சம்பவங்களை கடந்த சில ஆண்டுகளாக சந்தித்து உள்ளார்.
 
மாநிலத்துக்கு போலீஸ் அதிகாரம் இல்லாததாலும்,  மத்திய அரசுடன் மோதல் போக்கு நீடிப்பதாலும், கெஜ்ரிவாலுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படவில்லை என ஆம் ஆத்மி கட்சி முன்னணி தலைவர்களும், எம்எல்ஏக்களும், அமைச்சர்களும் அப்போது கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர்.
 
இதற்கிடையே, ஆந்திர மாநில முதலமைச்சரும் தெலுங்கு தேசக் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு கூறும்போது, தோல்வியின் விரக்தியில் இருக்கும் பாஜக, இதுபோன்ற தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளது. இதை வன்மையாக  கண்டிக்கிறேன். ஜனநாயக முறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முதலமைச்சரை இப்படி கொடூரமாகத் தாக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
 
பாதுகாப்பு ஏற்பாடுகளைச் சரியாக செய்யாத மோடி அரசின் டெல்லி போலீஸ் இதற்கு பொறுப்பேற்க  வேண்டும். இத்தகைய தாக்குதல்கள் ஜனநாயகத்தை பலப்படுத்துவதற்கான நமது உறுதியை, வலுப்படுத்தும் என்று தெரிவித்துள்ளார்.