கல்லூரியில் பிஎஸ்சி கணிதம் இரண்டாம் ஆண்டு படித்து வரும் மாணவி ஆர்யா ராஜேந்திரன் (வயது 21), திருவனந்தபுரம் மாநகராட்சி மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டு இந்தியாவிலேயே இளம் மேயர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
கேரள மாநில உள்ளாட்சித் தேர்தல் கடந்த 8, 10 மற்றும் 14 ஆம் தேதிகளில் மூன்று கட்டங்களாக நடந்து முடிந்து, வாக்குகள் கடந்த 16 ஆம் தேதி எண்ணப்பட்டன. அதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி வெற்றி பெற்றது.
மாவட்டப் பஞ்சாயத்துக்களில் மொத்தமுள்ள 14 இடங்களில் 11 இடங்களையும், வட்டார பஞ்சாயத்துக்களில் மொத்தம் உள்ள 152 இடங்களில் 108 இடங்களையும், கிராம பஞ்சாயத்துகளில் மொத்தம் உள்ள 941 இடங்களில் 514 இடங்களையும் இடது ஜனநாயக முன்னணி வென்றிருக்கிறது. ஆறு மாநகராட்சிகளில் 3 இடங்களையும், 86 நகராட்சிகளில் 35 நகராட்சிகளையும் வென்றிருக்கிறது.
கேரள உள்ளாட்சித் தேர்தலில் இதுவரை இல்லாத அளவு இளம் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டனர். முதலில் சிபிஎம் கட்சி கல்லூரி மாணவிகள் உள்ளிட்டவர்களை களம் இறக்கியது. அதைத் தொடர்ந்து பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் இளம் வேட்பாளர்களை அதிக அளவில் களம் இறக்கின.
அதன்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருவனந்தபுரத்தில் போட்டியிட்ட 21 வயதான ஆர்யா ராஜேந்திரன், திருவனந்தபுரம் மாநகராட்சி மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டு இந்தியாவிலேயே இளம் மேயர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஆர்யா ராஜேந்திரன், ஆல் செயிண்ட்ஸ் கல்லூரியில் பிஎஸ்சி கணிதம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். எஸ்எஃப்ஐ மாநிலகுழு உறுப்பினராகவும், சிபிஎம் கட்சியின் சிறுவர்கள் அமைப்பான பாலசங்கத்தின் மாநிலத் தலைவராகவும் உள்ளார்.
முடவன்முகல் வார்டு கவுன்சிலரான இவரது தந்தை ராஜேந்திரன் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வருகிறார். தாய் ஸ்ரீலதா எல்ஐசி ஏஜெண்டாகவும் உள்ளார்.
இதுகுறித்து ஆர்யா ராஜேந்திரன் கூறுகையில், “படிப்புடன் சேர்ந்து கவுன்சிலர் பணியையும் சிறப்பாகக் கொண்டு செல்ல வேண்டும் என்பது எனது எனது ஆசை. எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து எனது தந்தை கேசவரோடு சிபிஎம் கிளை உறுப்பினராக இருக்கிறார். அதனால் நான் கட்சியில் பொறுப்பெடுத்து வேலை செய்வதற்கு தந்தை உறுதுணையாக இருந்தார்.
கல்லூரியில் இப்போது ஆன்லைன் வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. தேர்தல் நேரத்தில் மூன்று தேர்வுகள் நடந்தன. அவற்றை எழுதியிருக்கிறேன். படிப்பைத் தொடர்வதுடன், மக்கள் பணியும் செய்வேன். திருவனந்தபுரம் மாநகராட்சியில் குப்பைகளைக் கையாளுவது, ஆரம்ப சுகாதார நிலையங்கள் கொண்டுவருவது போன்றவற்றுக்கு முக்கியத்துவம் கொடுப்பேன்” என்று உற்சாகத்துடன் கூறியுள்ளார்.