லடாக்கின் பாங்காங் ஏரியில் சீனா புதிய பாலம் ஒன்றை கட்டி வருவது சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள செயற்கைகோள் புகைப்படம் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியா-சீனா இடையேயான எல்லைப் பிரச்சினை கடந்த சில ஆண்டுகளாக தீவிரம் அடைந்துள்ளது. கடந்த 2020 மே மாதத்தில் கிழக்கு லடாக்கின் பல்வேறு பகுதிகளில் சீன ராணுவ வீரர்கள் அத்துமீறி நுழைய முயன்றனர். அவர்களை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர்.
இதைத் தொடர்ந்து கடந்த 2020 ஜூன் 15 ஆம் தேதி லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய, சீன வீரர்களுக்கு இடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர்.
கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலை தொடர்ந்து கிழக்கு லடாக்கில் டெப்சாங் சமவெளியில் இருந்து வடக்கேயும், தெற்கே டெம்சோப் பகுதியிலும் இருதரப்பிலும் தலா 50 ஆயிரம் வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஒரு ஆண்டாக நடந்த இருதரப்பு பேச்சுவார்த்தையை தொடர்ந்து கல்வான் பள்ளத்தாக்கில் மோதல் நடந்த இடத்தில் இருந்து 2 கி.மீ. தொலைவுக்குள் படைகளை வாபஸ்பெற ஒப்புக்கொள்ளப்பட்டது. ஆனாலும் தொடர்ந்து படைகள் குவிக்கப்பட்டு இருந்ததால் எல்லையின் பல இடங்களிலும் கடந்த 20 மாதங்களாக பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.
கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்குப் பிறகு பான்காங் ஏரிப் பகுதியில் சீன வீரர்கள் அத்துமீறி நுழைய முயன்றனர். அவர்களை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தி பின்வாங்க செய்தனர்.
லடாக்கின் பான்காங் ஏரி சுமார் 134 கி.மீ. நீளம், 5 கி.மீ. அகலம், 270 சதுர மைல் பரப்பளவு கொண்டது. இதன் 40% பரப்பளவு இந்தியாவிடமும் 50% பரப்பளவு சீனாவிடமும் உள்ளது. சுமார் 10% பரப்பளவு சர்ச்சைக்குரிய பகுதியாக நீடிக்கிறது.
இந்த பான்காங் ஏரி 8 பாகங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. இதில் 1 முதல் 4 வரையிலான பாகங்கள் இந்தியாவின் எல்லைக்கு உட்பட்டவை ஆகும். அண்மைக் காலமாக பான்காங் ஏரி பகுதியில் இந்திய ராணுவத்தின் கை ஓங்கி உள்ளது.
இந்திய எல்லையில் பாதுகாப்பு கட்டமைப்பு வசதிகள் அதிகரித்து வரும் நிலையில் சீனாவும் தற்போது பாதுகாப்பு நிலைகளை அதிகரித்து வருகிறது. இந்திய எல்லையையொட்டி சாலைகள், குடியிருப்புகள், ஹெலிகாப்டர் இறங்கும் தளம் உள்பட பாதுகாப்பு நடைமுறைகளை சீனா மேற்கொண்டது.
இந்த சூழலில் சீன எல்லைக்கு உட்பட்ட பான்காங் ஏரியின் இரு கரைகளையும் இணைக்கும் வகையில் அந்த நாட்டு ராணுவம் புதிய பாலத்தை கட்டி வருவது, செயற்கைகோள் புகைப்படம் மூலம் தற்போது அம்பலமாகி உள்ளது.
இதுகுறித்து சர்வதேச புவியியல் உளவுத் துறை நிபுணர் டேமியன் சைமன் ட்விட்டரில் செயற்கைக்கோள் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ள பதிவில், “பான்காங் ஏரியின் வடக்கு, தெற்கு கரையை இணைக்கும் வகையில் புதிய பாலத்தை சீன ராணுவம் கட்டி வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.
பான்காங் ஏரியின் வடக்கு பகுதியான குர்னாக்கில் இருந்து தெற்கு பகுதியான ரூடாக்குக்கு சாலை வழியாக செல்ல 200 கி.மீ. தொலைவை கடந்தாக வேண்டும். தற்போது இரு கரைகளையும் இணைத்து புதிய பாலத்தை சீன ராணுவம் கட்டியிருப்பதால் பயண தொலைவு 40 முதல் 50 கி.மீ. ஆக குறையும்.
இதன் மூலம் சீனா தனது படைகளையும், ஆயுதங்களையும், நவீன பீரங்கிகளையும் எளிதாகவும், விரைவாகவும் இந்திய எல்லைக்கு அருகே நிலைநிறுத்த முடியும். மேலும் இந்தியா- சீனா இடையேயான எல்லை பிரச்சினை தீரும் வரை சீனா தனது படையை எல்லையில் குவிக்க மேலும் ஒரு வழித்தடமும் அதற்கு கிடைத்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
கல்வான் பள்ளத்தாக்கு மோதலின்போது சீன ராணுவம் மிகப்பெரிய பின்னடைவை சந்தித்தது. அப்போது முதலே பான்காங் ஏரியில் பாலத்தை கட்டத் தொடங்கிவிட்டது. தற்போது பாலம் பணிகிட்டத்தட்ட நிறைவடைந்துவிட் டது. இவை தவிர கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் சாலை வசதிகளையும் சீனா மேம்படுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.