ஒரே தேர்வுக்கு இந்தியில் எழுதுபவர்களுக்கு மட்டும் இரண்டு வாய்ப்பு தரப்படுவது ஏன் என்று மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சான்றளிக்கப்பட்ட மேலாண்மை கணக்காளர் (CMA Inter) பதவிக்கு இந்தி வழி தேர்வர்களுக்கு மட்டும் எழுத்து பூர்வமான விடைத்தாள் (Physical answer sheet) இறுதி மதிப்பீட்டுக்கு எடுத்துக் கொள்ளப்படும். இதற்கு இந்தி வழி தேர்வர்கள் மட்டுமே தகுதி உடையவர்கள் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து Institute of Cost Accountants of India தலைவர் பி. ராஜு ஐயர், துணைத் தலைவர் விஜேந்தர் சர்மா ஆகியோருக்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எழுதிய கடிதத்தில், “என்னை மேற்கண்ட தேர்வை எழுதுகிறவர்கள் மற்றும் தேர்வர்களின் பெற்றோர்கள் அணுகி தேர்வு முறைமையில் உள்ள பாரபட்சத்தை கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

நானும் அந்த தேர்வுக்கு வெளியிடப்பட்டுள்ள அறிவிக்கையைப் பார்த்தேன். அப்பட்டமான பாரபட்சம் அதில் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். அந்த அறிவிக்கையின் 13 வது அம்சம் ‘இந்தி வழி தேர்வர்களுக்கு மட்டும் எழுத்து பூர்வமான விடைத்தாள் (Physical answer sheet) இறுதி மதிப்பீட்டுக்கு எடுத்துக் கொள்ளப்படும். இதற்கு இந்தி வழி தேர்வர்கள் மட்டுமே தகுதி உடையவர்கள்’ என்று அழுத்தமாக கூறப்பட்டுள்ளது.

இந்தியல்லாத வழித் தேர்வர்கள் அதாவது ஆங்கிலத்தில் தேர்வு எழுதுபவர்கள் கணினி தட்டச்சு வாயிலாக விளக்க முறை சார் கேள்விகளுக்கு விடைகள் தர வேண்டும். இதில் முன்னர் 40/100 மதிப்பெண்கள் மட்டுமே தரப்பட்டு வந்த நிலை மாற்றப்பட்டு,

தற்போது 60/100 என விளக்க முறை கேள்விகளுக்கான மதிப்பெண்கள் உயர்த்தப்பட்டுள்ளன. தட்டச்சு வாயிலாகவே விடைகளை அளிக்க வேண்டும் என்கிற பாரபட்சம் ஆங்கில வழி தேர்வர்களுக்கு சிரமத்தை தருவதோடு மதிப்பெண்களையும் குறைத்து விடும் என்ற அச்சம் உள்ளது.

இந்தி மொழியில் தேர்வு எழுதுகிறவர்களுக்கு மட்டும் இந்த சிறப்பு வழிமுறை எதனால் வழங்கப்படுகிறது. சென்ற ஆண்டு இல்லாத இந்த விதிமுறை இந்த ஆண்டு சேர்க்கப்பட்டு, மதிப்பெண்களும் உயர்த்தப்பட்டது ஏன்?

ஏன் இந்தி அல்லாத மொழியில் எழுதுகிறவரின் எழுத்துப்பூர்வ விடைத்தாள் எடுத்துக்கொள்ளப்படாது? எப்படி ஒரே தேர்வுக்கு இரண்டு வழிமுறைகள், இரண்டு விதமான விதிகள் இருக்க முடியும்? இது எப்படி தேர்வு எழுதுகிறவர்களுக்கு சமமான நியதியாக இருக்கும்?

இந்தி அல்லாதவர்களுக்கு சமதள ஆடுகளத்தை எப்படி தரும்? விரைவு தட்டச்சுக்குப் பழகாத இந்தி தேர்வர்கள் வேகமாக கையில் எழுதி கொடுத்து விடுவார்கள். ஆனால் இந்தி அல்லாத மாணவர்கள் வேறு வழியில்லாமல் அதிக நேரம் எடுத்து தட்டச்சு செய்து தான் கொடுக்க வேண்டும் என்பது அப்பட்டமான அநீதி.

குறிப்பாக பிரிவு சி&டி பிரிவுக்கானவற்றில் கூடுதல் காலத்தை விழுங்குவது தவிர்க்க முடியாது. ஆயிரக்கணக்கான தேர்வர்கள், இத்தேர்வை எழுத வேண்டியுள்ளது. அதற்குள் இப்பாரபட்சம் நீக்கப்பட வேண்டும் என்று கோருகிறேன். உங்களின் சாதகமான பதிலை எதிர்பார்க்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.