இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் தாயார் கரீமா பேகம் உடல்நலக் குறைவால் காலமானார்.
இரண்டு முறை ஆஸ்கர் விருதுகளை பெற்ற இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இந்தியா மட்டுமின்றி ஹாலிவுட்டிலும் தடம் பதித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் தாயார் கரீமா பேகம். வயது 73. இவர் கடந்த சில நாட்களாக வயது முதிர்வு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில், இன்று (டிசம்பர் 28) சிகிச்சை பலனின்றி கரீமா பேகத்தின் உயிர் பிரிந்தது. அவரது மறைவுக்கு தமிழ் உள்ளிட்ட பல்வேறு திரையுலகினர் மற்றும் அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தனது இரங்களில், ஜி.வி.பிரகாஷ் குடும்பத்தினரும், ஏ.ஆர்.ரஹ்மானின் தாயாரும் இருக்கும் போட்டோவை ட்விட்டரில் பதிவிட்டு எப்போதும், எங்கள் குயின் என்று கூறியுள்ளார். மறைந்த கரீமா பேகம் ஜி.வி.பிரகாஷ்குமாரின் பாட்டி ஆவார்.
Always our queen pic.twitter.com/dWNc0MHeJ9
— G.V.Prakash Kumar (@gvprakash) December 28, 2020
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் தாயார் கரீமா பேகம் அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்! தமிழில் தொடங்கி பல மொழிகளிலும் இசையமைப்பில் உச்சம் தொட்டு ஆஸ்கர் வரை உலகப் புகழினை பெற்றிடும் வகையில் ரகுமான் அவர்களை ஆளாக்கியதில் பெரும்பங்கு வகித்தவர் அம்மையார். தாயின் இழப்பில் துயர் அடைந்திருக்கும் ஏ.ஆர்.ரகுமான் அவர்களுக்கு ஆறுதல்! என்று கூறியுள்ளார்.
முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், இசைத்துறையின் ஜாம்பவான் இசையமைப்பாளர் திரு.A.R.ரஹ்மான் அவர்களின் அன்புத்தாயார் திருமதி.கரீமா பேகம் அவர்கள் உடல்நலக் குறைவால் காலமான செய்தி அறிந்து மனவேதனை அடைந்தேன். தாயாரின் பிரிவால் மிகுந்த துயருற்றிருக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்!” என்று கூறியுள்ளார்.
வழக்கை வாபஸ் பெற்ற இளையராஜா; பிரசாத் ஸ்டுடியோவுக்குள் செல்ல அனுமதி