நாடு முழுவதும் பட்டாசு விற்பனைக்கு தடை கோரிய வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது. இதில், பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு ஒட்டுமொத்த தடை விதிக்க முடியாது என கூறி உள்ள உச்ச நீதிமன்றம், தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நாட்களில் இரவு 8 மணி முதல் 10 மணி வரை 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என கட்டுப்பாடு விதித்துள்ளது. மேலும், புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் தினத்தன்று இரவு 11.55 மணி முதல் அதிகாலை 12.30 வரை 35 நிமிடங்கள் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும் என்றும் கட்டுப்பாடு விதித்துள்ளது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு, காற்று மாசுவை கருத்தில் கொண்டு நாட்டிலேயே முதல் முறையாக டெல்லியில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து, நாடு முழுவதும் பட்டாசு வெடிக்க தடை கோரி, மேற்கு வங்கத்தை சேர்ந்த அர்ஜூன் கோபால் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதேபோல், பல்வேறு பொதுநல மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன. அதே நேரம், பட்டாசுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதியில் இருந்து விலக்களிக்க வேண்டும் என சிவகாசி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த பட்டாசு உற்பத்தியாளர்களும் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனுக்கள் அனைத்தையும் ஒன்றாக இணைத்து உச்ச நீதிமன்றம் விசாரித்து வந்தது.

இந்த வழக்கில் தமிழக அரசு எதிர்மனுதாரராக வாதிட்டது. இரண்டு மாதங்களுக்கு முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ‘பட்டாசுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பதை நாங்கள் ஏற்கிறோம். ஆனால், இந்த ஆண்டில் அது முடியாது. ஏனெனில், இந்த ஆண்டு தீபாவளி–்க்கு தேவையான பட்டாசுகளை உற்பத்தி செய்து முடித்து விட்டோம். அதனால், இந்த வழக்கில் எடுக்கப்படும் முடிவு, யாருக்கும் பாதகம் இல்லாமல் இருக்க வேண்டும். ஏனெனில், பட்டாசு உற்பத்தியை நம்பி லட்சக்கணக்கான குடும்பங்கள் உள்ளன. அதற்கு முழுமையான தடை விதித்தால் பெரியளவில் பாதிப்புகள் ஏற்படும்’ என பட்டாசு உற்பத்தியாளர் சங்கம் சார்பில் வாதிடப்பட்டது.

இதற்கு மனுதாரரின் வழக்கறிஞர் அர்ஜூன் கோபால் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அவர் தனது வாதத்தில், ‘பட்டாசு காரணமாகவே டெல்லியில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அடுத்தாண்டு முதல் சுற்றுச்சூழல் பாதிப்பில்லாத வகையில் பட்டாசை உற்பத்தி செய்வதாக கூறும் உற்பத்தியாளர்கள், இதுவரை பாதிப்புள்ள பட்டாசை தயாரித்துள்ளனர் என்பதை ஒப்புக் கொள்கின்றனர். அதேபோல், தமிழகத்தில் பட்டாசு ஆலைகளில் குழந்தை தொழிலாளர்களை பயன்படுத்தி வருகிறார்கள். இதையும் நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும்’ எ்ன்று தெரிவித்தார்.

ஆனால் பட்டாசுக்கு முழுமையாக தடை விதிக்கக் கூடாது என தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

இந்த வழக்கில் நீதிபதிகள் ஏகே.சிக்ரி, அசோக் பூஷண் அமர்வு நேற்று தீர்ப்பு அளித்தது. அதில், நீதிபதிகள் கூறியிருப்பதாவது: நாடு முழுவதும் பட்டாசு உற்பத்தி, விற்பனை மற்றும் அதை வெடிக்க தடை விதிக்க முடியாது. இருப்பினும், இதில் ஒரு சில நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். அதிகளவு மாசு ஏற்படுத்தாத பசுமை பட்டாசுகளை மட்டுமே இனி விற்க வேண்டும். முறையான உரிமம் பெற்றவர்கள் மட்டும்தான் பட்டாசு உற்பத்தி, விற்பனையை செய்ய வேண்டும்.

தீபாவளி மற்றும் சமூகம் சார்ந்த பண்டிகைகளின் போது இரவு 8 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே, அதாவது 2 மணி நேரம் மட்டுமே பட்டாசுகளை வெடிக்கலாம். அதேபோல், புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது இரவு 11.55 மணி முதல் அதிகாலை 12.30 மணி வரை மட்டுமே சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத பட்டாசுகளை வெடித்து கொண்டாடலாம். இதை அந்தந்த பகுதிகளை சார்ந்த காவல் துறையினர் கண்காணிக்க வேண்டும். இல்லை என்றால், அதனால் ஏற்படும் பாதிப்புகளுக்கு அவர்களே பொறுப்பேற்க வேண்டிய நிலை ஏற்படும்

மேலும், விழாக்களின் போது வெடிக்கப்படும் பட்டாசுகளின் தரத்தையும் கண்டிப்பாக கண்காணிக்க வேண்டும். இந்த உத்தரவு டெல்லி, உத்தரப் பிரதேசம் மற்றும் அரியானா ஆகிய என்சிஆர் பகுதிகளுக்கும் பொருந்தும். இந்த கட்டுப்பாடுகளை பெட்ரோலியம் மற்றும் வெடிமருந்து தயாரிப்பு பாதுகாப்பு ஆணையம் (பெசோ) தீவிரமாக கண்காணிக்க வேண்டும். இது தவிர, தீபாவளிக்கு முன்பாக 7 நாட்களும், அதற்கடுத்த 7 நாட்களும் என மொத்த 14 நாட்களில் காற்று, ஒலி, மாசு ஆகியவை குறித்த தகவல்களை தேசிய மாசு கட்டுப்பாட்டு வாரியம், யூனியன் பிரதேச மாசு கட்டுப்பாட்டு வாரியங்கள் தனித்தனியாக அறிக்கையாக தயாரிக்க வேண்டும். இவ்வாறு தீர்ப்பில் கூறியுள்ளனர்.